விஜய்-முதல்வர் சந்திப்பு : திமுக-வை மெர்சலாக்கும் திட்டமும் இருக்கிறதாம்!

விஜய்-முதல்வர் சந்திப்பில் அரசியல் கணக்குகள் அலசப்படுகின்றன. திமுக-வை மெர்சலாக்கும் திட்டம் இதில் இருப்பதாக அவரது ரசிகர்கள் பற்ற வைக்கிறார்கள்.

விஜய்-முதல்வர் சந்திப்பில் அரசியல் கணக்குகள் அலசப்படுகின்றன. திமுக-வை மெர்சலாக்கும் திட்டம் இதில் இருப்பதாக அவரது ரசிகர்கள் பற்ற வைக்கிறார்கள்.

விஜய், தமிழ் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக சினிமா வசூலில் முன்னணியில் இருப்பவர்! இந்த ஆண்டு தீபாவளியைப் பொறுத்தவரை, இவரது ‘மெர்சல்’தான் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு! ஆனால் விஜய் படங்களுக்கே உரிய சர்ச்சையும் சிக்கலும் ‘மெர்சல்’-ஐயும் விட்டு வைக்கவில்லை.

விஜய்-யின் துப்பாக்கி, தலைவா போல கடைசி நேரத்தில் படம் ரிலீஸாகுமா? என்கிற கேள்விக்குறி எழுந்தது. காரணம், படத்தில் புறா பயன்படுத்தியிருப்பது தொடர்பாக விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பட தயாரிப்பு நிர்வாகத்தினர், ‘அது ஒரு பெரிய பிரச்னை இல்லை. ஒரே நாளில் அந்தச் சிக்கலை சரி செய்து, திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் ரிலீசாகும்’ என கூறினர்.

மெர்சல் நெருக்கடி

விஜய், அதன்பிறகும் அமைதியாகாமல், இன்று (15-ம் தேதி) சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது பலரது புருவங்களையும் உயர வைத்திருக்கிறது. ‘தமிழ் சினிமாவுக்கான கேளிக்கை வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கவே’ சந்தித்ததாக விஜய் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. வழக்கமாக பிரதமர் மோடியை சந்திக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் வகையறாக்கள், ‘மாநில நலனுக்காக சந்தித்தோம்’ என சொவ்லது போன்ற ‘ஸ்டேட்மென்ட்’தான் இது.

 vijay, actor vijay-cm edappadi palaniswami meeting, tamilnadu government, tamil cinema,mersel, entertainment tax

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதேசமயம், விலங்குகள் நல வாரிய பிரச்னைக்காக முதல்வரை சந்திக்க வேண்டிய தேவையும் விஜய்-க்கு இல்லை. இது குறித்து சினிமா வட்டாரத்தில் சிலரிடம் கேட்டபோது, ‘கேளிக்கை வரி குறைப்புக்காக தனி ஆளாகப் போராடியவர் நடிகர் விஷால்தான். தலைமைச் செயலகத்தில் அவரும் பிரகாஷ் ராஜூம் அடுத்தடுத்து 3 நாட்கள் உட்கார்ந்து பேசியபோது, அமைச்சர்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயம் ஒன்றுதான்!

அதாவது, ‘அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியை சிந்திக்காமல் கேளிக்கை வரியை குறைக்கச் சொல்கிறீர்கள். பெரும் நிதிச்சுமையை தாங்கிக்கொண்டு 2 சதவிகிதம் குறைக்கிறோம். ஆனால் இனி விதிமுறைகளுக்கு புறம்பாக சினிமா தியேட்டர்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுப்போம். அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும்கூட!’ என அழுத்திக் கூறியிருக்கிறார்கள் அமைச்சர்கள்!

விஜய்-விஷால் அரசியல்!

பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷாலும், ‘பெரிய நடிகர்களின் படங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில்தான் டிக்கெட் விற்கப்படும்’ என கூறினார். ‘தியேட்டர்கள் அதை மீறினால், நடவடிக்கை எடுக்க நாங்களும் ஒத்துழைப்போம்’ என்றார் விஷால்.

இந்தச் சூழலில் வெளியாகும் பெரிய நடிகரின் முதல் படம் மெர்சல்தான்! ‘விஷால் அவரது பதவி காரணமாக அப்படி கூறிவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விஜய்-யின் படங்களுக்கு டிக்கெட்டை விற்றால், வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போட்ட பணத்தை எடுக்கும் வாய்ப்பே கிடையாது. அதாவது, திருட்டு வி.சி.டி.க்கள் புழங்கும் முன்பு முதல் 3 அல்லது 4 நாட்களில் எடுக்கும் வசூல்தான் முக்கியம்.

நடிகர் சங்கத் தேர்தலில் இருந்தே விஷாலுக்கும் விஜய்-க்கும் ஒத்துப் போகவில்லை. இந்த முறை அக்டோபர் 6 முதல் புதிய படங்கள் திரையிட மாட்டோம் என விஷால் சொன்னதையும் விஜய் பொருட்படுத்தவில்லை. அதனால் விஷால் திட்டமிட்டு தியேட்டர்களுக்கு இந்த தருணத்தில் நெருக்கடி கொடுக்கிறாரோ? என்கிற சந்தேகம் விஜய் தரப்புக்கு இருக்கிறது. விஷாலுக்கும் தனக்குமான அரசியலை சுட்டிக்காட்டி, தியேட்டர்களின் தனது படத்திற்கு பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்ளவே செய்தித்துறை அமைச்சருடன் சென்று முதல்வரை விஜய் சந்தித்தார்’ என்கிறார்கள், கோலிவுட் பிரமுகர்கள்.

விஜய் இமேஜ் சரியாதா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பை பொறுத்தவரை, கமல்ஹாசன் அடுத்தடுத்து காய்ச்சியதால் கோலிவுட் தரப்பில் வேறு யாரையும் புதிதாக பகைக்க விரும்பவில்லை. அதிலும் விஜய் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோ தன்னை சந்திப்பதை ‘பிளஸ்’ஸாக நினைக்கிறார் முதல்வர். எனவேதான் விஜய் ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்டதும், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் வீட்டில் அழைத்து பேசியிருக்கிறார்.

சரி, கமல்ஹாசன் போன்றவர்கள் இந்த ஆட்சியை எதிர்த்துப் பேசி தங்களது அரசியல் இமேஜை ஏற்றிக்கொண்டிருக்கும் சூழலில், விஜய் இப்படி சரண்டராவது அவரது இமேஜை பாதிக்காதா? அதுவும், பலவீனமான ஒரு அரசிடம் அவர் இப்படி சரண்டர் ஆக வேண்டுமா? இது விஜய்-யின் அரசியல் கனவுக்கு ஆப்பு ஆகிவிடாதா? என அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் முன்வைத்தோம்.

விஜய் ரசிகர்கள் கூறும் லாஜிக்!

அவர்களோ, ‘தமிழக அரசியலில் திமுக-வை யார் கடுமையாக எதிர்க்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அரசியல் எதிர்காலம்! 50 ஆண்டுகால அரசியல் வரலாறு இதுதான். இப்போதும் கூட தனது இளைய தளபதி பட்டத்தை திமுக-வினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ‘தளபதி’ என மாற்றிக்கொண்டு ‘மெர்சல்’ படத்தை விளம்பரப் படுத்தியிருக்கிறார் விஜய்.

எனவே திமுக எதிர்ப்புதான் அரசியலில் விஜய்-யின் அடையாளம்! அதிமுக பலவீனமானாலும்கூட, அந்தக் கட்சியின் தொண்டர்கள் திமுக-வை எதிர்க்கும் விஜயை ஏற்பார்கள். எனவே கமல்ஹாசன், விஷால் ஆகியோரைப்போல எடப்பாடி அரசை எதிர்க்க வேண்டிய அவசியம் விஜய்-க்கு இல்லை’ என புது ‘லாஜிக்’குடன் பேசுகிறார்கள் அவர்கள்.

ஒருவேளை அதிமுக-வில் இணைந்து, அந்தக் கட்சியை கைப்பற்றும் முடிவுக்கு வருவாரோ விஜய்?

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close