நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா, செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளி மாணவிகள் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என மாறி மாறி எதிர்க்கட்சிகள் கண்டன பொதுக்கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. அதேசமயம், மாணவர்கள் மத்தியில் நீட் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்தி, திமுகவினர் தங்களது அரசியல் லாபத்திற்காக மாணவர்களை போராட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு ரூ.7 லட்சம் ரூபாய் நிதியுதவியை அனிதா குடும்பத்திற்கு வழங்கியது. ஆனால், அனிதாவின் குடும்பத்தினர் அதனை வாங்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து திமுக சார்பில் 10 லட்சமும், நடிகர் ராகவா லாரன்ஸ் சார்பில் 15 லட்சமும், தமிழக காங்கிரஸ் சார்பில் 5 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும், அனிதா குடும்பத்தை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று அரியலூர் மாவட்டம் குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z263-300x217.jpg)
எப்போது வேண்டுமானாலும், எந்தவிதமான உதவியும் தான் செய்ய தயாராக உள்ளதாக அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் உறுதி அளித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z264-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z269-300x217.jpg)
முன்னதாக, அனிதா இறந்த போதே விஜய் அவரது வீட்டிற்கு செல்வதாக இருந்தது. ஆனால், அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமாத் துறையினரும் அதிகளவு வந்ததால், பாதுகாப்பு காரணம் கருதி விஜய் அப்போது செல்லமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.