நடிகர் விஷால், ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூவர்மாக அறிவித்துள்ளார். இயக்குநர் அமீரும் களம் காண்கிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்று முதல் முதலில் சொன்னது ietamil.com தான்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெயலலிதா மறைவை முன்னிட்டு அந்த தொகுதி காலியாக உள்ளது. இதையடுத்து, டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய திங்கட்கிழமை (டிசம்பர் 4) கடைசி நாள். இந்நிலையில், தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட இருப்பதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் விஷால்.
This is to inform everyone that I have decided to contest in the upcoming election to be held in RK Nagar.
I will be filing my nomination this Monday, 4th Dec.
Hoping for a change & the change is inevitable....GB
- Vishal
— Vishal Film Factory (@VffVishal) 2 December 2017
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு களம் இறங்குகிறார் திமுக வேட்பாளரான மருது கணேஷ். அதிமுக சார்பில் மதுசூதனன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன், தீபா என இந்தப் போட்டி பலமானதாகவே இருக்கிறது. இதில், விஷாலும் களம் காண்பதால் இன்னும் சுவராஸ்யத்தை கூட்டியுள்ளார்.
இதனிடையே மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக 'V Shall' செயலியையும் அவர் 25ம் தேதி அவர் அறிமுகப்படுத்த உள்ளார்.
நடிகர் விஷால் முதல் முறையாக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பல ஆண்டுகளாக நடிகர் சங்க பதவிகளில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோரை தோற்கடித்தார். அதே போல தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் அவர் முதல் முறையாக போட்டியிட்டு தலைவராக தேர்வானார். மிகப் பெரிய ஜாம்பாவான்களை அவர் தேர்தலில் தோற்கடித்தார்.
நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் சில நல்ல சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார். அதே போல அனிதா பிரச்னையில் இருந்து, முக்கியமான மக்கள் பிரச்னையில் அவர் தனது குரலை ஒங்கி ஒலித்து வருகிறார். இந்நிலையில் எந்த கட்சியையும் சாராமல், நேரடியாக தேர்தல் களத்துக்கு வருகிறார். சினிமா பிரபலம் தனக்கு கைகொடுக்கும் என அவர் கருதுவதாக தெரிகிறது.
எப்போதோ அரசியலில் இறங்குவார் என எதிர்பார்த்த ரஜினியும், ‘இதோ வந்துவிடுவார்’ என்று எதிர்பார்க்கப்படும் விஜய்யும் இன்னும் மவுனமாக இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத கமல், விஷால் தான் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில், விஷாலுக்கு கமலின் ஆதரவு இருக்கும் என்கிறார்கள். அதனால்தான், எந்தப் பின்புலமும் இல்லாமல் துணிந்து களமிறங்குகிறார் விஷால். ஒருவேளை விஷாலை வைத்து கமல் ஆழம் பார்க்கும் விஷயமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
வருகிற திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் விஷால். விஷாலைப் போலவே இயக்குநர் அமீரும் தேர்தலில் நிற்கப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, ‘‘சினிமாவில் அவருக்கு வந்த நெருக்கடியே அவரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வைத்தது. அப்போது கிடைத்த அனுபவமே அவரை தயாரிப்பாளர் சங்க தேர்தலையும் சந்திக்க வைத்தது.
தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது அவர்களைச் சென்று பார்த்தால் விஷால். அதன் பின்னர்
விவசாயிகள் பிரச்னைக்காக நடிகர் சங்க நிர்வாகிகளுடன் டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தார். அப்போது அவர் நடிகர் சங்க நிர்வாகிகளை நிற்க வைத்துக் கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேசி அனுப்பி வைத்தார். நடிகர்களை மதிக்கவில்லை. இந்த சம்பவம் அவரை கடுமையாக பாதித்துவிட்டது. அரசியல்வாதியாக இருந்தால் மட்டும்தான் மரியாதை கிடைக்கும் என்றால் நாம் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளார்’’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.