அரசியலில் நுழைந்தார், நடிகர் விஷால்: மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பு

Vishal Starts New Forum: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷால், அரசியலில் கால் பதித்தார். மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கினார் அவர்!

நடிகர் விஷால், தீவிர அரசியல் ஆர்வம் கொண்டவர்! நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பதவிக்காக தேர்தலில் நின்றது, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டது என அனைத்துமே அரசியலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. அவற்றில் அவர் வெற்றியும் பெற்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட விரும்பினார் அவர். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சிலர், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வைத்தனர்.

விரைவில் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் முடிவைப் பொறுத்து, அந்தத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா? என்பது தெரிய வரும். இந்தச் சூழலி விஷால் நேரடி அரசியலில் இறங்குகிறார்.

மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்குவதாக இன்று (ஆகஸ்ட் 29) அறிவித்தார் விஷால். அதற்கான பேனரில், ‘விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகம் உள்ளது.

தொடர்ந்து பேசிய விஷால், ‘வீதியில் நடப்பதை பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது, சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம். அரசியல் என்பது மக்கள் பிரச்னையை தீர்ப்பதுதான்; ஆனால் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது’ என்றார்.

நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்த நாள். பிறந்த நாளில் அவர் புது இயக்கம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close