விஷால் - டிடிவி தினகரன் இன்று திடீர் சந்திப்பு!

நடிகர் விஷால் டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்கையின் திருமணத்துக்காகப் பத்திரிகை கொடுத்துள்ளார்.

தமிழக சினிமாவில் மிகப்பெரும் ஆளுமைகள் எல்லாம் தமிழக அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டு சிலர் வெற்றியும், பலர் தோல்வியும் அடைந்தனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ரஜினி, கமல் என இருவருமே அரசியலில் நுழையும் எண்ணத்தில் இருப்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால், இந்த இருபெரும் ஆளுமைகளுக்கு ஆதரவும் உள்ளது, அதைவிட அதிகமாக எதிர்ப்பும் உள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தமிழக சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் இது அப்பட்டமாக தெரிந்தது. ரஜினி, கமல் இருவரில் யார் அரசியலில் கட்டாயமாக நுழைவார்கள் என்பதை விட, யார் முதலில் நுழைவார்கள் என்பதிலேயே எதிர்பார்ப்பும், பலத்த போட்டியும் நிலவுகிறது.

நிலைமை இப்படியிருக்க சத்தமே போடாமல், நடிகர் விஷால் சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதும் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. சரத்குமார், ராதாரவி என்ற ஜாம்பவான்கள் வசமிருந்த நடிகர் சங்கத்தை, எதிர்த்து நின்று கம்பீரமாக கைப்பற்றிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றி அதற்கு தலைவராகவே ஆகிவிட்டார்.

அவ்வப்போது, அரசியல் தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் விஷால், தன்னை மெல்ல மெல்ல தமிழக அரசியலுக்கு ஏற்றவாறு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தற்போது, ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இணைப்பு, சசிகலா நீக்கம், பெரும்பான்மை நிரூபிக்க கோரிக்கை என தமிழக அரசியலே பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், டி.டி.வி.தினகரனை நடிகர் விஷால் இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் வரும் 27-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனால், தங்கையின் திருமணத்துக்காக பத்திரிகைகளைக் கொடுத்துவருகிறார், விஷால். இந்தத் திருமணத்தில், சினிமா பிரபலங்கள் தவிர அரசியல் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில்கூட வைகோவை சந்தித்து பத்திரிகை கொடுத்தார் விஷால். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்கையின் திருமணத்துக்காகப் பத்திரிகை கொடுத்துள்ளார்.

இதேபோன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், விஷால் பத்திரிகை வைப்பாரா அல்லது அவர்களை தவிர்த்துவிடுவாரா  என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

×Close
×Close