சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா? இதை விவாதிக்க சர்வதேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? துரதிர்ஷ்டவசமாக நான் இதற்கு சாட்சியாக இருப்பதற்காக குற்ற உணர்வடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ட்விட்டரில் ஒருவர், அடுத்து வரும் படத்தில் இந்த தாக்குதல் குறித்த விழிப்புணர்வை தெரிவிக்க வேண்டும் என்பது என் அவா' என்று விவேக்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கு, 'நிச்சயம் தெரிவிப்பேன். இது உறுதி' என்று விவேக் பதில் அளித்துள்ளார்.