பிஜேபியில் இணைகிறாரா நடிகர் விவேக்? மத்திய அமைச்சருடன் ரகசிய சந்திப்பு

தமிழகத்தில் பிஜேபி தன்னை வலுவான சக்தியாக மாற்றிக் கொள்ள தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக தன்னை வளர்த்துக் கொள்ள தீவிரமாக இருக்கிறார்கள். முதல் கட்டமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்களை கட்சியில் சேர்க்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கங்கை அமரனுக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுத்தனர். எஸ்.வி.சேகர், காய்த்ரி ரகுராமன் உள்பட பல சினிமா பிரபலங்கள் பிஜேபியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தொண்டர்களை பெருமளவில் ஈர்க்க முடியவில்லை.

ரஜினியை எப்படியாவது பிஜேபிக்குள் கொண்டு வர தீவிர முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இரண்டாவது மூன்றாவது கட்ட நடிகர்களை கட்சிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

பிஜேபியின் பார்வையில் இப்போது சிக்கியிருப்பவர் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். பாலசந்தரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவர், நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் அப்துல் கலாமின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒருலட்சம் மரக்கன்றுகள் நட்டவர்.

இவரும் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். சமீபத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள வீவேக் வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்னா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அந்த சந்திப்பின் போது, ‘பிஜேபியில் சேர்ந்துவிடுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று மத்திய அமைச்சர் அவரிடம் சொல்லியிருக்கிறார்.

நடிகர் விவேக் கட்சியில் இணைவது பற்றி முடிவெடுக்க அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் நடிகர் விவேக், மோடி அல்லது அமீத் ஷா முன்பாக பிஜேபியில் இணைவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நடிகர் விவேக்கிடம் கருத்துக் கேட்க முயன்றோம். அவருடைய உதவியாளர் செல்முருகன் போனை எடுத்துப் பேசினார்.

‘அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தது உண்மைதான். தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் நடும் திட்டம் அரசுக்கு உள்ளது. அந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டார். விவேக்கும் மரம் நடும் விழாவில் கலந்து கொள்ள உறுதி கொடுத்திருக்கிறார். மற்றப்படி அரசியலில் ஈடுபடும் எண்ணம் விவேக்கிற்கு இல்லை’ என்றார்.

×Close
×Close