scorecardresearch

“இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!” கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விவேக் ட்வீட்!

நடிகரும் இதுவரை கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்காதவருமான விவேக், தனது ட்விட்டரில் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து இரண்டு ட்வீட்களை தட்டியுள்ளார்

“இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை!” கமலின் அரசியல் பிரவேசம் குறித்து விவேக் ட்வீட்!

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தை முந்திக் கொண்டு அரசியல் ரேஸில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன். தனது அரசியல் களமாக ட்விட்டரையும், அரசியல் மேடையாக பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பயன்படுத்துக் கொள்கிறார்.

இப்போதெல்லாம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அந்த ஷோவிற்கு வருகிறாரா அல்லது தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேச வருகிறாரா என்பது அவருக்கே குழப்பமாகத் தான் இருக்கிறது.

‘ஊழலுக்கு எதிரான எனது போராட்டம்’ என்று கூறும் கமல், அது என்னவோ அதிமுகவை மட்டும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை ஆண்ட மற்றொரு கட்சி மீது ஊழல் கறை ஏதும் இல்லை என்று நினைக்கிறாரா? அல்லது ‘அது பரவாயில்லை’ என்று நினைக்கிறாரா என்பது தெரியவில்லை. அதிமுகவை மட்டும் அவர் சாடுவதினால் நமக்கு ஏற்படும் ஐயம் இது. அவ்வளவே.

எது எப்படியோ… அரசியல் சூட்டில் கமலின் தோசை எந்த அளவிற்கு வேகப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதிய மாவில் தோசை ஊற்றுவாரா அல்லது அரைத்த பழைய மாவில் சுடுவாரா என்பதை அறியவும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம்! என்ன தான் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மிரட்டி உருட்டி பார்த்தாலும், எதற்கும் அசைந்து கொண்டுப்பதாக இல்லை கமல். மாறாக, அனைத்திற்கும் பதில் அம்பு விடுகிறார் தனது ட்விட்டரின் மூலம்.

சமீபத்தில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டிற்கே நேரடியாக வந்து கமல் ஜி-யின் அரசியல் அவாக்களை கேட்டறிந்தார். ஆனால், அதன் பின் இருவரும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, கேஜ்ரிவாலின் முகம் ஏனோ சற்று வாடியிருந்ததை கவனிக்க முடிந்தது. (ஆம் ஆத்மி-யில் சேர சொல்லியிருப்பாரோ!?… இருக்கலாம். யார் கண்டா?)

ஒரு மாநிலத்தின் முதல்வரே கமலை நேரடியாக வந்து சந்தித்து அரசியல் நிலவரத்தை அலசும் அளவிற்கு ஆண்டவரின் அரசியல் வேகம் உச்சக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில், நடிகரும் இதுவரை கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் கூட நடிக்காதவருமான விவேக், தனது ட்விட்டரில் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து இரண்டு ட்வீட்களை தட்டியுள்ளார்.

முதலாவது ட்வீட்டில், “அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்!அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தாரோ என்னவோ, ஒருமணி நேரம் கழித்து தனது இரண்டாவது ட்வீட்டில், “வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்கள் குறித்து நாம் விவேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, “நான் டப்பிங் தியேட்டரில் இருக்கிறேன். கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து எனது கருத்து அவ்வளவு தான். அதைத் தான் ட்விட்டரில் தெரிவித்துள்ளேன். இதற்கு மேல் அதைப்பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை” என்று ‘நறுக்’கென முடித்துக் கொண்டார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Actor vivek tweets about kamalhaasan political entry

Best of Express