எம்.ஜி.ஆர். 101வது பிறந்த நாள் : நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? எம்.ஜி.ஆர். பதில் இதோ...

தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ‘நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ‘நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

பல வருடங்களாகவே நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு நாடாள்வது என்பது நடந்து வருகிறது. தற்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியலுக்கு வருவதாக ஒரே சமயத்தில் அறிவித்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ‘நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா?’ என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் எம்.ஜி.ஆர். அந்த சந்திப்பில் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்களும் இதோ…

கேள்வி : விமர்சனம் எப்படி இருக்க வேண்டும்?
பதில் : ஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடுத்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில், அந்தக் கட்டத்தில் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ, ‘மோசம், அற்புதம்’ இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். இந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது? எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது? அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.

நமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே, பத்திரிகையாளர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வைத்துக்கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.தவிர, விமர்சனம் எழுதும்போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை போன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
என்னுடைய கலையை, நடிப்புத் தொழிலை விமர்சிக்க உங்களுக்கு பரிபூரண உரிமை உண்டு. ஏனெனில், கலை வளர வேண்டுமானால் விமர்சனம் அவசியம். நேர்மையான விமர்சனத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கலை சம்பந்தப்பட்ட மட்டில் எங்களிடம் உள்ள குறைகளை நீங்கள் தாராளமாகக் கூறுங்கள். அதைத் தாண்டி எங்கள் சொந்த விஷயத்தை, கட்சி கொள்கை விஷயத்தை நீங்கள் கருத்தில் கொள்ளலாகாது. ஏனென்றால், உங்கள் சொந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடுவது இல்லை.
முதலில், நடிப்பைப் பற்றி விமர்சிக்கும் முன்பு உங்களை ஒன்று கேட்கிறேன். இந்த நாட்டில், படித்தவர் இன்னின்ன வேலைக்குத் தகுதி வாய்ந்தவரெனப் பட்டம் பெறுகின்றனர். சட்டம் படித்து ஒருவர் வக்கீலாகலாம். வைத்தியம் படித்து ஒருவர் டாக்டராகலாம். ஆனால், எந்தக் கல்லூரியில் படித்து நாங்கள் நடிகராவது? இதற்கு இந்த நாட்டில் ஏதாவது வசதி செய்யப்பட்டுள்ளதா? இல்லையே… ஏதோ எங்கள் சுயமுயற்சியைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு நடிக்கிறோம். இதில் குறைகள் இருக்கலாம். இதை அபிவிருத்தி செய்து கொள்ளவே உங்கள் விமர்சனம் எங்களுக்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

கேள்வி : நடிகர் சங்கம் மூலம் நீங்கள் புதிய நடிகர்களுக்குப் பயிற்சி அளிக்கலாமே?
பதில் : அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஒவ்வொரு வருஷமும் ஒரு நாடகப்போட்டி வைத்து, அதில் முக்கியமான வேஷங்களைப் புதியவர்களும், சிறிய வேஷங்களைப் பிரபலமான நடிகர்களும் ஏற்று நடித்து, புதிய நடிகர்களின் திறமையை எடுத்துக்காட்டி, அவர்களைத் தொழிலில் உள்ளவர்கள் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால், இந்த முயற்சியில் எங்களுக்கு இடையூறாக பல பெரிய புள்ளிகளே இருந்து, அதை நடக்கவிடாமல் தடைசெய்தனர்.

கேள்வி : தேர்தலில் நடிகர்கள் கலந்து கொள்வது பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
பதில் : நிச்சயம் கலந்து கொள்ளத்தான் வேண்டும். தற்போது கலைஞனுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் மூலமாவது கலைஞன் பிரதிநிதித்துவம் பெற வேண்டியதுதானே? என்.எஸ்.கே.யோ, டி.கே.சண்முகமோ இதற்கு தகுதியானவர்கள் என்பது எங்கள் கருத்து.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close