கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் அரவிந்த் சாமி இருவரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த விகடன் வார இதழில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார் கமல்ஹாசன். அதில், ‘முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர்’ என்று எழுதியிருந்தார்.
மேலும், ‘இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது’ என்றும் கமல்ஹாசன் அந்த தொடரில் கூறி இருந்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே, கமல்ஹாசன் மீது உத்தரப்பிரதேச மாநிலம் பனாரஸில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உள்ளனர்.
இந்நிலையில், இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா, கமலுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
‘கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும். மக்கள் நம்பும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக யாரேனும் அவதூறு கருத்துகள் கூறினால், அவர்கள் இந்தப் புனித மண்ணில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைக்கு அவர்கள் மரணமடைய வேண்டும்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்து மகா சபையின் மீரட் பொறுப்பாளர் அபிஷேக் அகர்வால், ‘நம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நடித்த படத்தை புறக்கணிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இந்தியர்கள் அனைவரும் கமலின் படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்து மதத்தைப் பற்றிப் பேசிய யாரையும் மன்னிக்கமுடியாது’ என்று கூறினார்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தும் உங்கள் செயலுக்குப் பெயர் தீவிரவாதம் இல்லையென்றால், எதற்குப் பெயர் தீவிரவாதம்? மனிதர்களை மத ரீதியாகத் தாக்குவது, பசு பாதுகாப்பிற்காக மனிதர்களைக் கொல்வது, கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களைத் தாக்குவது இவையெல்லாம் தீவிரவாதம் இல்லையென்றால், எது தீவிரவாதம்?’ என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
‘தீவிரவாதம் என்பது ஒரு நபர் சட்டவிரோதமாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகும். குறிப்பாக, பொதுமக்களுக்கு எதிராக அரசியல் லாபத்திற்காக செயல்படுவதுதான் தீவிரவாதம்’ என அரவிந்த் சாமியும் ட்விட்டரில் கூறியுள்ளார்.