ஓமலூர் அருகே தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு ஒன்றில் குடும்ப தலைவி ஒருவரின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் படம் இடம்பெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை 2010-ம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.
அதன்பின்னர், 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு ரூ.700 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்துவிட்டன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்துக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆர்.சி.செட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா, ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பின் தற்போது அங்குள்ள ரேஷன் கடையில் சரோஜாவிற்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. இதை பெரியாசாமி தான் சென்று வாங்கியுள்ளார். அதில், குடும்பத்தலைவி சரோஜா என்று சரியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முகவரியும் சரியாக இருந்தது. ஆனால், தனது மனைவி சரோஜா புகைப்படத்திற்கு பதில் நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்ததை கண்டு பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு வேறு புகைப்படம் அளித்தால், மாற்றி தருவதாகவும் அதுவரை இந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துமாறும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையில் தான் குழப்பம் என்றால் ஸ்மார்ட் கார்டிலும் இதுபோன்று குளறுபடிகள் நடப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.