பல்லாவரத்தில் நடிகை ரஞ்சிதா ரூத்ரதாண்டவம்: ரூ. 30 கோடி நிலத்தை மடக்க தீவிரம்

ஆவணங்களை சமர்ப்பிக்காததால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (67). இவர் மற்றும் இவரது உறவினர்கள் என ஒரே குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசிக்கின்றனர்.

இந்த இடம், அரசு புறம்போக்கு கிராம நத்தத்தில் உள்ளது. 2 ஏக்கர் 19 சென்ட் பரப்பளவு. இதன் மதிப்பு ரூ.30 கோடி என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னையை சேர்ந்த ராமநாதன் என்பவர் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி உயர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ராமநாதனிடம் இடத்திற்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளது. உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் இக்குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சில கன்டெய்னர்களில் நித்யானந்தாவின் சீடர்கள் 20க்கும் மேற்பட்டோர் புடைசூழ குடியிருப்பு பகுதிக்கு நடிகை ரஞ்சிதா வந்துள்ளார். இதையடுத்து கிருஷ்ணனிடம் பேசிய ரஞ்சிதா, ‘‘இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் எங்கள் மடத்தில் நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார். இந்த இடத்தை நித்யானந்தாவின் மடத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளார். எனவே நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு’’ என்று மிரட்டியுள்ளார்.

அதோடு நித்யானந்தாவின் சீடர்கள் இக்குடியிருப்பு வளாகத்திலேயே சிறிய அளவில் குடிசை அமைத்தும் தகராறு செய்துள்ளனர்.

 அங்கே நித்யானந்தாவின் படத்தை வைத்து பூஜை புனஸ்காரத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் கொடுத்துள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close