அதிமுக அம்மா அணி தீர்மானம்: டிடிவி அணி ஆவேசம்; கேள்வி கேட்கும் ஓபிஎஸ்அணி

அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By: August 10, 2017, 1:49:14 PM

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக அம்மா அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிகார மோதல் காரணமாக அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. அதிமுக அம்மா அணி என சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியினரும் செயல்பட்டு வந்தனர். அதிமுக-வின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறை சென்றதும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை சசிகலா நியமனம் செய்தார்.

தொடர்ந்து, சசிகலா நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை இலை சின்னத்துக்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர்.

இதனிடையே, முடக்கப்பட்ட அதிமுக சின்னமான இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் கைது செய்யப்பட்ட தினகரன் சிறை சென்றார். அதிமுக அம்மா அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து, இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டம் தெரிவித்தனர். இதனால், பேச்சுவார்த்தையில் இன்றளவும் இழுபறி நிலவு வருகிறது.

இந்த சூழலில் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், கட்சி நடவடிக்கைகளில் மீண்டும் இறங்கினார். இதனை எடப்பாடி பழனிசாமி அணியினர் விரும்பவில்லை. தொடர்ந்து அவருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால்,”இரு அணிகளையும் இணைப்பதற்கு நான் அளித்த காலக்கெடு முடிவடைந்து விட்டது” எனக் கூறிய தினகரன், அதிரடியாக புதிய நிர்வாகிகளை நியமித்தார். அத்துடன் சுற்றுப்பயணம் குறித்தும் அறிவித்தார். அவர் அளித்த பதவியை சிலர் புறக்கணித்தனர். சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சசிகலாவால் கட்சியின் துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, தினகரன் ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில், தினகரனின் நியமனம் சட்டவிரோதமானது என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது. தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செல்லாத ஒன்று. தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அதிமுக-வினர் நிராகரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயகுமார்,”முதலமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டோம்” என்றார்.

ஆனால், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். “சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளருக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு. சசிகலாவால் கட்சியில் பதவிபெற்ற செங்கோட்டையன், சண்முகம், ஜெயக்குமார் பதவியில் இருந்து விலக வேண்டும்” என தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதேபோல்,”தினகரன் பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள். தினகரன் பதவி செல்லாது என்றால், அவரை ஆர்.கே.நகர் தேர்தலின் போது வேட்பாளராக தேர்வு செய்தது ஏன்?” என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம், பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொன்னையன் கூறும்போது,”அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

தீர்மானத்தில் டிடிவி தினகரன் குறித்து மட்டுமே உள்ளது. சசிகலா குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த தீர்மானம், இருஅணிகள் இணைப்புக்கானது போன்று தெரியவில்லை என பன்னீர்செல்வம் அணியின் ஆஸ்பயர் சாமிநாதன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதாரவாளர்கள் பங்கேற்றுள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Admk amma faction resolution team ttv dhinakaran angry team ops questions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X