பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பாஜக ஜனாதிபதி வேட்பாளரான ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், பாஜக வேட்பாளருக்கு பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேசமயம், “குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் சசிகலா தான் முடிவு எடுப்பார்” என்று தினகரன் கூறியிருந்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி இன்று தன்னிச்சையாக தனது ஆதரவை அறிவித்துள்ளார்.

முன்னதாக, தலித் பின்னணி கொண்ட பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளராக, கடந்த 19-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தலித்துகளிடம் பாஜக மீதுள்ள வெறுப்பை சரிசெய்யவே பாஜக, ராம்நாத்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளதாக தமிழக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக, ‘குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மகிழ்ச்சியில்லை’ என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

×Close
×Close