தேர்தல் பிரசாரம் இந்த ரேஞ்சில்தான் நடக்கும் என்பது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம், அதுவும் ஆரம்பமே இவ்வளவு அநாகரீக உச்சமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கவில்லை.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) காலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘டாப்’பில் இருந்த ஹேஷ்டேக், ‘தளபதியா, தறுதலையா’. விஜய் -அஜீத் ரசிகர்கள் அவ்வப்போது இந்த ரேஞ்சில் சண்டை போடுவது ட்விட்டர்வாசிகளுக்கு பழக்கமானது. எனவே இதுவும் அவர்களின் அக்கப்போர் என கடந்து போனவர்கள் அதிகம்.
எதேச்சையாக அந்த ஹேஷ்டேக்கை ‘க்ளிக்’ செய்து பார்த்தவர்கள் மிரண்டுதான் போனார்கள். சினிமா ரசிகக் குஞ்சுகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபிக்கும் விதமாக ஒரு அரசியல் கட்சியே முன்னெடுத்த ‘ட்விட்டர் ட்ரெண்டிங்’ அது. ஆம், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என அரசியல் நாகரீகத்திற்கு தனி அத்தியாயம் படைத்த அண்ணா உருவாக்கிய திமுக முன்னெடுத்த டிரெண்டிங்!
தளபதி என அவர்கள் குறிப்பிடுவது, வழக்கம்போல ஸ்டாலினை! தறுதலை என இலைமறைக்காயாகக் கூட அல்லாமல் வெளிப்படையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கேலிச் சித்திரத்தை வரைந்திருக்கிறார்கள்.
இதில் திமுக.வை மட்டும் குறை சொல்லிவிட முடியாது என்பது நிஜம். ஒருவகையில் இது அவர்கள் அதிமுக.வுக்கு ஆற்றிய எதிர்வினைதான். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையுடன் அக்டோபர் 7-ம் தேதி அதிமுக ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. ‘மண்ணின் மைந்தனா, மன்னரின் மகனா?’ என்பதுதான் அந்தப் பிரசார வாசகம். அதில் எடப்பாடி பழனிசாமியை விவசாயியாக காட்டிவிட்டு, ஸ்டாலினை புலிகேசி வடிவேலு ரேஞ்சுக்கு கேலியாக சித்திரம் வரைந்து கலாய்த்திருந்தார்கள்.
அந்த சித்திரமும், மன்னரின் மகன் என்கிற விமர்சனமும் திமுக.வை காயப்படுத்தியதின் விளைவு, இன்று திமுக அதைவிட ஒருபடி கீழே இறங்கி அதிமுக.வை அடித்திருக்கிறது. இனி, அண்ணா பெயரை கட்சியிலும் கொடியிலும் வைத்திருக்கும் அதிமுக, அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடும்.
மேடைகளில் கழகங்கள் முன்வைக்காத விமர்சனங்கள் இல்லைதான். அறிக்கைகளிலும்கூட சில பிரச்னைகளில் இந்த ரேஞ்சுக்கு மோதிக் கொள்கிறவர்களே! ஆனால் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு வரவிருக்கிற தேர்தல் பிரசாரம்தான், இவ்வளவு ஆக்ரோஷமாக ஆரம்பிக்கிறது என நினைக்கையில், திகிலடிக்கிறது.
பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் என பேசிப் பழக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் என்றால் ஒருவேளை இப்படியொரு பிரசாரத்தை தொடங்க சற்றேனும் கூசியிருப்பார்கள். ஆனால் இப்போது இரு தரப்புமே அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘வியூக நிபுணர்களை’ வைத்துக்கொண்டு விளையாட்டைத் தொடங்கியிருக்கின்றன.
வியூக நிபுணர்களுக்கு, பெரியார்- அண்ணா- கலைஞர்- எம்ஜிஆர் என யாரும் தேவையில்லை. இன்றைய தேதியில் தங்கள் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகவேண்டும். எதிர்க்கட்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்ய வேண்டும். முடிந்த அளவுக்கு தங்கள் தரப்பு தலைவரை ஹீரோவாக காட்ட வேண்டும். அதற்காக கம்ப்யூட்டர்கள் எப்படி வேண்டுமானாலும் கார்ட்டூன்களை வரைந்து தள்ளும்.
அரசியல் வணிக மயமானால் என்ன நடக்கும்? என்பதற்கு இன்னொரு உதாரணமாக கண் முன் வந்து நிற்கிறது இந்த மோதல். இரு கட்சித் தலைமைகளும் சற்றேனும் தலையிட்டு, நாகரீகம் பேணுவார்களா? எனப் பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"