அதிமுகவுக்கு 'இட்லி'யால் பிரச்சனை.... பாஜகவுக்கு 'அட்லி'யால் பிரச்சனை!

குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானால் மெர்சல் படத்திற்கு கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோரை விட, "தமிழ் - இசை"யால் கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோர் பெட்டர் எனலாம்

‘மறதி’ என்ற ஒன்று இல்லையெனில், மனிதனால் இவ்வுலகத்தில் வாழவே முடியாது. குறிப்பாக தமிழனால்… அவ்வளவு விஷயத்தை தினம் தினம் நாம் பார்க்கிறோம். மறுநாள் அதனை மறக்கடிக்கும் அளவுக்கு மற்றொரு புது விஷயம் களத்திற்கு வந்துவிடும். அதற்கும் மறுநாள் மற்றொரு செய்தி. இப்படித் தான் தமிழர்களின் பொழுது தினமும் கடந்துக் கொண்டிருக்கிறது.

எழுபது நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்து, ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களால் போற்றப்பட்ட ஒரு தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது, இத்தனை நாட்களாக மருத்துவமனையில் வைத்து என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த காலத்தில், அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. “அம்மா சரியாகிவிட்டார், நாளை வீடு திரும்பி விடுவார், அம்மா ஜெயா டிவி பார்த்தார், அம்மா நர்சுகளுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை பற்றிய விவரங்களை கேட்டறிந்து வைத்துள்ளார், அம்மா இட்லி சாப்பிட்டார்” என்று தினம் தினம் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தனர்.

ஆனால், இன்றோ நிலைமை எல்லாம் தலைகீழாக மாறி, “அம்மா இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது எல்லாம் பொய். எங்களை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி படுத்தேவிட்டார் ஒரு அமைச்சர். இதை சில அமைச்சர்கள் ஒப்புக் கொள்ள, மற்ற சில அமைச்சர்கள் ‘அய்யய்யோ… அதலாம் இல்ல.. நாங்க சொன்னதுலாம் உண்மை தான்’ என்று பதறியடித்துக் கொண்டு பதில் தந்தனர். கட்சிக்குள் அமைச்சர்களே இப்படி மாறி, மாறி பேச, இதை கெட்டியாக படித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ‘நாங்க அப்பவே சொன்னோம்ல’ என்கிற மோடில் அமைச்சர்களை வசைபாடத் தொடங்கினர். தொடர்ந்து, விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தனர்.

ஒருபக்கம் எதிர்க்கட்சிகளின் டார்ச்சர், மறுப்பக்கம் மக்கள் சமூக தளங்களில் மீம்ஸ் போட்டே வறுத்தெடுக்க, ஒருவழியாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் முதல்வர் பழனிசாமி.

இதை மறக்கடிக்கும் விதமாக டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவ, விசாரணைக் கமிஷனாவது மண்ணாவது என்று அனைவரது கவனமும் டெங்கு பக்கம் திரும்பியது. அல்லது திரும்ப வைக்கப்பட்டது எனலாம். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 பேராவது டெங்கு காய்ச்சலால் செத்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றது தமிழக அரசு.

இந்த நிலையில், தான் தீபாவளிக்கு வெளியானது விஜய்யின் மெர்சல் படம். பிரதமர் மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, மருத்துவத் துறையில் உண்மையில் நடக்கும் அவலங்களை வெட்ட வெளிச்சமாக, 4k டால்பி அட்மாஸ் சவுண்ட் எஃபக்ட்டில் இப்படம் உலகிற்கு சொன்னது. அட்லி இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் மிகவும் தைரியமாக, மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து பேசியிருந்தார்.

விஜய்க்கு அரசியல் விருப்பம் உள்ளது என்பதால் அவர் இதுபோன்ற வசனங்களை பேசுவதாக வைத்துக் கொண்டாலும், இயக்குனர் அட்லியும் ஏன் அதற்கு ஒத்துப் போக வேண்டும்? ஆக, அட்லியும் மத்திய அரசின் இந்த திட்டங்களை எதிர்க்கிறார் என்றே நாம் பொருள் கொள்ள முடியும். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளருக்கு படத்தில் எதை வைக்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தெரியாதா என்ன? விஜய்யும், அட்லியும் உட்கார்ந்து பேசி முடிவு செய்தே மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்களை படத்தில் வைத்துள்ளனர்.

படம் ரிலீசானவுடன் ‘எடுடா எந்த அருவாள’ என்கிற மோடில் பொங்கிய பாஜகவினர், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக விஜய் பேசிய வசனங்களை உடனடியாக படத்தில் இருந்து ‘கட்’ செய்ய வேண்டும். இல்லையெனில், வழக்கு தொடரப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

‘டாக் ஆஃப் தி டவுன்’ என்று சொல்வது போல், சாதாரண படமாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு படத்தை, இந்திய அளவில் பிரபலப்படுத்தி, பேசும் பொருளாக மாற்றிய பெருமை பாஜகவையே சாரும்.

குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மானால் மெர்சல் படத்திற்கு கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோரை விட, “தமிழ் – இசை”யால் கிடைத்த பேக் கிரவுண்ட் ஸ்கோர் தான் சிறப்பு.

ஜெயலலிதாவின் மரணத்தை மறந்து, தினகரனின் சவால்களை மறந்து, டெங்குவை மறந்து, மெர்சலாக போய்க் கொண்டிருக்கிறது மெர்சல் பட விவகாரம். ஆக, அதிமுகவுக்கு இட்லியால் பிரச்சனை என்றால், பாஜகவுக்கு அட்லியால் பிரச்சனை!.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close