அதிமுக அணிகள் இணைப்பு திங்கள் கிழமை நல்லபடியாக நடைபெறும் என்று நிதிஅமைச்சர் ஜெயக்குமார் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக அணிகள் இணைவது திங்கள் கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, அதிமுக-வின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி அலங்கரிக்கப்பட்டது. ஆனால், அன்று அணிகள் இணைப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில், இரு அணிகளின் தரப்பில் இருந்துவரும் தகவலின்படி, திங்கள் கிழமை அதிமுக அணிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள மீனவ கிராமமான ஏ.கே காலனியில், கோவில் விழா ஒன்றில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று(20-08-17) கலந்து கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்க இருக்கிறதோ அது நாளைக்கு நன்றாகவே நடக்கும். அதிமுக-வை பொறுத்தவரை சோதனைகள் ஏற்படும் போது தான், அது பல சாதனைகளை படைக்கும். அதே போன்ற சாதனை போன்ற நிகழ்வு தான் திங்கள் கிழமை நடைபெறவுள்ளது.
பாஜக-வின் கதை, திரைக்கதை, வசனத்தின் படியே அதிமுக அணிகள் செயல்படுவதாக மு.க ஸ்டாலின் கூறியது குறித்து?
மு.க ஸ்டாலினுக்கு தான் சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும். கமல்ஹாசனுடன் சேர்ந்துள்ள மு.க ஸ்டாலினுக்கு, கமல்ஹாசனின் பழக்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
அணிகள் இணைப்பில் ரூ.500 கோடி கைமாறப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளதே?
அதிமுக என்பது மாபெரும் இயக்கம். அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மக்களும் சேர்ந்து தான் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், இதற்கு மாறான கருத்தை தெரிவிப்பவர்களுக்கு ஏற்கெனவே பல பட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. எட்டப்பர்களாகவும், துரோகிகளாகவும், கருப்பு அத்தியாயத்தில் இருப்பவர்களாகவே அவர்களை வரலாறு கருதும். அவர்கள் என்ன கூறினாலும், அவர்களின் எண்ணம் நிறைவேறாது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/TTV.jpg)
டிடிவி தினகரன் கூறியது போல உங்களது அணியில் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்களா?
ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். தற்போது, நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் இருக்கிறோம், ஆதலால் 2021-ம் வரை நாங்கள் தான் ஆட்சி செய்வோம். அதன்பின்னர் மக்களை சந்தித்துவிட்டு, நாங்கள் தான் மீண்டும் ஆட்சி அமைப்போம்.
ரஜினிகாந்த்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நீங்கள் கட்சி ஆரம்பித்தால் கூட நான் வரவேற்பேன். ஆனால், அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா ? என்பது தான் கேள்விக்குறி.
அமித் ஷா தமிழகம் வருகை
இந்தியா என்பது ஒருமைப்பாடு உள்ள நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அமித் ஷா தமிழ்நாட்டுக்கு தானே வருகிறார். தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல வில்லையே. அமித் ஷா அவரது கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில் தமிழகம் வருகிறார். அமித் ஷா வருவதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.
ஒபிஎஸ் அணிக்கு பதவி
ஓபிஎஸ் அணிக்கு பதவிகள் கொடுப்பது என்பது கொள்கை ரீதியிலான முடிவு. எனவே, அதனை தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட முறையில் கூற இயலாது என்று ஜெயக்குமார் கூறினார்.