அதிமுக அணிகளை இணைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் துடியாய் துடித்தாலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்வம் காட்டவில்லை. அப்படி ஓ.பி.எஸ். அணியினர் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணங்கள் இவைதான்...
1.இன்னமும் ஓ.பி.எஸ். நம்பர் டூ-வா? : எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாரில்லை. அதேசமயம், தொண்டர்கள் மத்தியில் தலைவராக உருவாகிவிட்ட ஓ.பி.எஸ்., இன்னமும் ஜெயலலலிதாவிடம் இருந்ததுபோல நம்பர் டூ-வாகவே இருக்க வேண்டுமா? என்கிற கேள்வி அவரது ஆதரவாளர்களிடம் எழுகிறது.
2.பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா?: ‘ஆட்சி உனக்கு; கட்சி எனக்கு!’ என டீல் போடலாம் என்றால், அதற்கும் எடப்பாடி அணி முழுமையாக ஒத்துழைக்க தயாரில்லை. ஒருவேளை ஓ.பி.எஸ்.ஸை பொதுச்செயலாளர் ஆக்கினால், இப்போது டிடிவி.தினகரன் செய்வதைப்போல எடப்பாடியையே கட்சியை விட்டு நீக்கினால் என்ன செய்வது? என்கிற பதற்றம் இ.பி.எஸ். அணியிடம் இருக்கிறது.
எனவே ஒரு வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்; அந்தக் குழுவுக்கு ஓ.பி.எஸ். தலைவராக இருக்கட்டும் என இ.பி.எஸ். தரப்பு கூறுகிறது. ஆனால் இந்த ஐடியா ஓ.பி.எஸ். தரப்புக்கு பிடிக்கவில்லை.
3.யார், யாருக்கு அமைச்சர் பதவி?: இரு அணிகளும் பிரிந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஓ.பி.எஸ். மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். இப்போதும் அவர்கள் எடப்பாடி அணியில் செல்வாக்காக இருக்கிறார்கள். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இன்னமும் டி.டி.வி தரப்புடன் நட்புடன் இருப்பதாக ஓ.பி.எஸ். தரப்பு நம்புகிறது. இவர்களில் சிலரையாவது விடுவிக்க இ.பி.எஸ். தயாராவாரா? என ஓ.பி.எஸ். தரப்பில் கேட்கிறார்கள்.
இதைவிட முக்கியம், அணிகள் இணைந்தால் ஓ.பி.எஸ்., மாபாய் பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி என பேசப்படுகிறது. இவர்களில் ஓ.பி.எஸ்., மாபாய் ஓ.கே! செம்மலைக்கு கொடுப்பதாக இருந்தால், அதே அணியில் எம்.எல்.ஏ.வாக உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என ஒரு கோரிக்கை கிளம்புகிறது. ஆக, அமைச்சர் பதவியை பங்கு வைப்பது பெருங்குழப்பம்!
4. கொங்கு ஆதிக்கத்தை விட முடியுமா? : ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ். ஆகியோர் அதிகாரத்தில் இருந்தவரை, அ.தி.மு.க.வில் தென் மாவட்டத்தின் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் அதீத ஆதிக்கம் செலுத்தினார்கள். இப்போது சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இருவருமே அதிகார மகுடத்தை இழந்த நிலையில், முதல் முறையாக கொங்கு பகுதியினர் அதிகாரத்தின் உச்சத்தை தொட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஆரம்பகட்டத்தில் எழுந்த சில சிக்கல்களை டெல்லியில் பேசி சரி செய்ததில் கொங்கு லாபிக்கு முக்கிய பங்கு உண்டு.
ஒருவேளை மீண்டும் ஓ.பி.எஸ். கைகளுக்கு கட்சி சென்றால், மறுபடியும் தென் மாவட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் கட்சியில் வலுப்பெறும். இதை கட்சியில் உள்ள கொங்கு பிரமுகர்கள் ஏற்றாலும்கூட, அவர்களுக்காக வேலை செய்த ‘லாபியிஸ்ட்கள்’ விடுவார்களா? கொங்கு மண்டல வாக்குகளே அதிமுக.வை அதிகாரத்தில் அமர்த்தியது. எனவே ஆட்சியும் கட்சியும் கொங்கு பிரமுகர்களின் கைகளில் இருப்பதுதான் நியாயம் என்கிற குரலை சிலர் ஓங்கி ஒலிக்கிறார்கள். இது ஓ.பி.எஸ். தரப்புக்கு நெருடல்!
5.ஓ.பி.எஸ். செல்வாக்கு குறையுமா? : ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாமை, நீட் உள்ளிட்ட பிரச்னைகளில் சாதிக்க முடியாதது, அமைச்சர்களை சுற்றிய ஐ.டி. ரெய்டுகள், டெல்லி அழுத்தத்திற்கு பணிந்து ஒரு மாணவியையும்கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியது, பொது நலனுக்காக போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை கைது செய்து நீண்ட நாள் சிறை வைத்தது, மாநிலம் முழுவதும் தலைதூக்கிய வறட்சி, குடிநீர் பஞ்சம் என இந்த ஆட்சி சம்பாதித்து வைத்திருக்கும் கெட்ட பெயர் நிறைய!
அதேசமயம் ஓ.பி.எஸ். ஆட்சியில் இருந்த குறுகிய காலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதி, சென்னை குடிநீருக்காக ஆந்திர முதல்வருடன் சந்திப்பு, புயல் நிவாரணப் பணிகளில் சுறுசுறுப்பு என நற்பெயர் ஈட்டியிருந்தார். இப்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்தால், அந்தப் பெயரை இழக்க வேண்டியிருக்கும் என ஓ.பி.எஸ்.ஸை அவரது ஆதரவாளர்களே மிரட்டுகிறார்கள்.
6.ஓ.பி.எஸ். தளபதிகளுக்கு மரியாதை கிடைக்குமா? ஓ.பி.எஸ். அணியில் முக்கிய தளகர்த்தர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.ஹெச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன், சண்முகநாதன், ஜெயபால் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி இல்லை. எனவே அணிகள் இணைப்புக்கு பிறகு இவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா? என்பது பெரிய கேள்வி. ஓ.பி.எஸ். அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் இணைப்பு முயற்சியில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இது முக்கிய காரணம்.
7.விஜயபாஸ்கர் நீக்கப்படுவாரா? : இரு அணிகளுக்கும் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஓ.பி.எஸ். மீதான அதிக விமர்சனங்களை வைத்தவர்களில் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஒருவர். இப்போது ஐ.டி. ரெய்டு, சொத்து முடக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் விழிபிதுங்கி நிற்பவரும் அவரே! ஓ.பி.எஸ். இணையவேண்டும் என்றால், விஜயபாஸ்கரை நீக்கவேண்டும் என்கிற நிபந்தனையையும் ஓ.பி.எஸ். அணியில் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
அப்போதுதான் ஊழலுக்கு எதிரானவராக ஓ.பி.எஸ்.ஸை பிரகடனப்படுத்த முடியும் என்பது அவர்கள் வாதம்! தவிர, விஜயபாஸ்கரையும் தீவிர டிடிவி ஆதரவாளராக ஓ.பி.எஸ். டீம் பார்க்கிறது. அவரை நீக்க இ.பி.எஸ். சம்மதிப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது.
8.டெல்லி சுல்தான் யார்? ஜெயலலிதா இருந்தவரை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையே டெல்லி விவகாரங்களில் அதிமுக.வின் பிரதிநிதியாக உலா வந்தார். சசிகலா, டிடிவி. தரப்பு ஆதரவாளராக அவர் இருந்தாலும், இப்போது முழுக்க எடப்பாடியை அனுசரிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து அவரையே டெல்லியில் முன்னிலைப்படுத்த எடப்பாடி தரப்பு விரும்புகிறது.
ஆனால் ஓ.பி.எஸ். தனி அணியான பிறகு இந்த அணிக்காக மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லியில் செய்திருக்கும் லாபி அதிகம். அணிகள் இணைப்புக்கு பிறகு இவர்களுக்கு டெல்லியில் என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது? என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது.
9.டிடிவி. ஆதரவு நிர்வாகிகளுக்கு கல்தா? தலைமைகழக நிர்வாகிகளில் இன்னமும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முக்கியத்துவத்தை இ.பி.எஸ். குறைப்பாரா? என்கிற கேள்வியை ஓ.பி.எஸ். தரப்பில் அழுத்தமாக எழுப்புகிறார்கள்.
10. மாவட்ட தளபதிகளின் தயக்கம்: ஓ.பி.எஸ். தனி அணியான பிறகு, அந்த அணிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாவிட்டாலும்கூட, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஓரிருவர் தங்களை தலைவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மூலமாகவே ஓ.பி.எஸ். தனது தர்மயுத்த கூட்டங்களை நடத்தி வருகிறார். இப்போது இ.பி.எஸ். அணியுடன் இணைந்தால், அவர்கள் எல்லாம் மறுபடியும் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் வாய்ப்பே அதிகம்.
உதாரணத்திற்கு, சேலத்தில் முதல்வர் எடப்பாடி தரப்புக்கு எதிராக கடும் போட்டியைக் கொடுத்தவர் செம்மலை. அப்போது செம்மலையுடன் இருந்தவர்கள் இனி முதல்வரை எதிர்த்து கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியுமா? அதேபோல விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்த லட்சுமணன், நாகையில் ஓ.எஸ்.மணியனை எதிர்த்த ஜெயபால் ஆகியோரின் கதி என்ன? என்கிற கேள்வி எழுகிறது. இ.பி.எஸ். அணியுடன் இணைய மாவட்ட அளவிலேயே ஓ.பி.எஸ். அணியில் எதிர்ப்பு கிளம்ப இது ஒரு காரணம்!
இத்தனை தடைகளைத் தாண்டி, அணிகள் இணைந்தால் அது இன்னொரு அதிசயம்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.