Advertisment

அதிமுக அணிகள் இணைப்பு LIVE UPDATES : ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.!

அதிமுக வின் எடப்பாடி பழனிசாமி. - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பு LIVE UPDATES இங்கே தரப்படுகிறது. ‘ஐஇ தமிழ்’ வழங்கும் LIVE UPDATES இதோ..

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps and ops, AIADMK

அதிமுக வின் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பு LIVE UPDATES இங்கே தரப்படுகிறது.  ‘ஐஇ தமிழ்’  வழங்கும்  LIVE UPDATES இதோ..

Advertisment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது உயிர்த்தோழி சசிகலா தலைமையில் அதிமுக.வினர் ஒருங்கிணைந்தனர். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி அப்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய திடீர் தியானம் மூலமாக இந்த ஒருங்கிணைப்பில் விரிசலை உருவாக்கினார். சசிகலா முதல்வர் பதவியை நோக்கி காய் நகர்த்தியதே அந்த விரிசலுக்கு காரணம்.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் காட்சிகள் மாறின. சசிகலாவால் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை உயர்த்த ஆரம்பித்தார். ஓ.பி.எஸ். அணியை தங்களுடன் வந்து இணையும்படி ஆரம்பம் முதல், எடப்பாடி அணியினர் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், ‘சசிகலா நீக்கம், ஜெ. மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை’ என இரட்டை கோரிக்கைகளை முன்வைத்து ஓ.பி.எஸ். அணியினர் இணைப்புக்கு தடை போட்டு வந்தனர். இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் ஆரம்பித்ததும், ஓ.பி.எஸ்.ஸுடன் இணைப்பு நடவடிக்கையை வேகப்படுத்த முடிவெடுத்தனர்.

அதன்படி, ‘ஜெ.மரணத்திற்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் பங்களா அரசுடமை’ என இரட்டை அறிவிப்புகளை எடப்பாடி வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததால், ஓ.பி.எஸ். அணியின் ‘தர்மயுத்தத்தை’ இதற்கு மேலும் நீடிக்க முடியாத நெருக்கடி உருவானது. அவர்கள் எதிர்பார்த்த மாதிரி ஆட்சி கவிழும் சூழல் இல்லாதது ஒருபக்கம், டெல்லியில் இருந்து உருவான அழுத்தம் இன்னொரு பக்கம் ஆகியவையும் இணைப்பை நோக்கி ஓ.பி.எஸ்.ஸை நகர்த்தின.

ஆகஸ்ட் 20-ம் தேதி தனது இல்லத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., “பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவை எட்டுவோம்’ என்றார். அதேபோல எடப்பாடி அணியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், வீரமணி உள்ளிட்டவர்கள் இணைப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதாக பேட்டி கொடுத்தனர்.

இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளின் அணிவகுப்பு இன்று (ஆகஸ்ட் 21) அரங்கேறுகிறது.

காலை 8.45 மணி : ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியபோதே முக்கிய முடிவுகளை அமாவாசை தினத்தில் எடுப்பது வழக்கம். அதே பாணியில் இன்று இணைப்பு நடவடிக்கைகளை வைத்துக்கொள்வது என்பது இரு தினங்களுக்கு முன்பே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் பேசி வைத்த முடிவு.

இன்றே இணைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு, ஓ.பி.எஸ். அணியில் இருந்து புதிய அமைச்சர்களையும் பதவியேற்க வைத்துவிடுவதாக திட்டமிட்டனர். இதை உறுதி செய்வதுபோல ஆளுனர் வித்யாசாகர்ராவ் மும்பையில் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு கிளம்ப ஆயத்தமானார்.

காலை 9.00 : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம், அதே சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லம் ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்புகளுடன் குவிய ஆரம்பித்தார்கள்.

காலை 9.15 : சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் இணைப்பு நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்ப்பு உருவானது. அதற்கு முன்னதாகவே டிடிவி.தினகரன் அணியினர் தங்களின் ஆதரவாளர்களுடன் தலைமைக் கழகம் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. எனவே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு பொறுப்பில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட அஸைன்மென்ட், ‘எந்தக் காரணத்தைக் கொண்டும் டிடிவி.தினகரனையோ, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையோ உள்ளே விடக்கூடாது’ என்பதுதான்.

காலை 9.30 : மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றார்கள். முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டு,  அங்கிருந்து சென்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முதல்வரின் இல்லத்திற்கு சென்றனர்.

காலை 9.45 : கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு அவரது அணியைச் சேர்ந்த மதுசூதனன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், மாஃபாய் பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர். இவர்கள் மொத்தமாக ஓ.பி.எஸ்.ஸுடன் ஆலோசனை நடத்தினார்கள். கே.பி.முனுசாமியிடம் நிருபர்கள் பேசியபோது, ‘அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் செய்தி ஒன்றை சற்று நேரத்தில் தெரிவிப்போம்’ என்றார். இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்பட்ட அவரே இப்படி கூறியது, இணைப்பை உறுதி செய்வதாக இருந்தது.

காலை 10.00 : முன் தினமே சென்னையில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஒவ்வொருவராக ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர்.

காலை 10.15 : எடப்பாடியின் இல்லத்தில் மொத்தமாக அமைச்சர்களையோ, நிர்வாகிகளையோ அழைத்துப் பேசாமல், ஒவ்வொருவராக வருவதும் சந்தித்து செல்வதுமாக இருந்தனர். ‘இணைப்பு உறுதி ஆகிவிட்டது. தலைமைக்கழக அலுவலகத்தில் சந்திப்போம்’ என அவர்களிடம் எடப்பாடி கூறி அனுப்பியதாக தெரிய வந்தது.

காலை 10.30 : சென்னை பெசன்ட் நகரில் உள்ள டிடிவி.தினகரன் இல்லத்திற்கு அவரது ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். டிடிவி.தினகரன் ஆதரவாளர்களில் பலரும், ‘தலைமைக்கழக அலுவலகத்திற்கு நாம் செல்வோம்’ என வலியுறுத்தியபடி இருந்தனர். ஆனால் டிடிவி.தினகரன், ‘அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்க வேண்டாம்’ என சமாதானப்படுத்தினார்.

காலை 10.45 : ஓ.பி.எஸ். அணி தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

publive-image அதிமுக தலைமை அலுவலக திருவிழாக் கோலம்

காலை 11.00 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த வேளையிலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு உருவானது. இதைத்தொடர்ந்து தலைமைக்கழகத்தில் தொண்டர்கள் கூட்டமும் அதிகரித்தது, தலைமை அலுவகத்திற்கு வந்த தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை ரவி நிருபர்களிடம் கூறுகையில், ‘இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அண்ணன் ஓ.பி.எஸ்.ஸும் இணைப்பு அறிவிப்பை வெளியிடுவார்கள். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம்’ என்றார்.

காலை 11.15 : ஓ.பி.எஸ். இல்லத்தில் இருந்து நிர்வாகிகள் சிலர் கிளம்பி, மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தை மலர்களால் அலங்கரிக்கும் பணி நடந்தது. இங்கு வந்து வணங்கிய பிறகே, இணைப்பு முடிவை ஓ.பி.எஸ். அறிவிப்பார்; அல்லது தலைமைக் கழகம் செல்வார் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறினர்.

publive-image ஜெ. நினைவிடத்தில் மலர் அலங்காரம்

காலை 11.30 : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் வர ஆரம்பித்ததைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையை அனைவரும் எதிர் நோக்கியிருக்கிறார்கள்.

பகல் 11.45  : இரு அணிகளின் மேல்மட்டங்களில் பதவி பேரம் தொடர்பான சலசலப்புகள் சில இருந்தாலும், அதிமுக.வின் அடிமட்டத் தொண்டர்கள் இந்த இணைப்பை தீபாவளி திருநாளாக கொண்டாடுவதை காண முடிகிறது. அதிமுக தலைமை அலுவலகம், முதல்வரின் இல்லம், ஓ.பி.எஸ். இல்லம், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் ஆகிய 4 இடங்களிலும் திரண்டிருந்த தொண்டர்களின் மனநிலை இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகவே இருந்தது.

நண்பகல் 12.00 : அமைச்சர்கள் அனைவரும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார்கள். டிடிவி.தினகரனால் அண்மையில் கட்சி பதவி பெற்ற முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி உள்பட சிலரும் இணைப்புக்கு ஆதரவாக இங்கு வந்தனர். ஓ.பி.எஸ். ஆதரவு தொண்டர்களையும் அதிமுக தலைமை அலுவலகத்தில் காண முடிகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிமுக அலுவலகம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது.

பகல் 12.30 : காலையில் முதல்வருடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே சென்றிருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்தனர். இவர்கள் மூவரும் ஒரே காரில் எங்கே சென்றுவிட்டு வந்தனர்? என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கூறப்படவில்லை. இரு அணிகளீன் இணைப்புக்கு மீடியேட்டரான இந்துத்வா பிரமுகர் ஒருவரை அவர்கள் சந்தித்து திரும்பியதாக கூறப்படுகிறது.

பகல் 12.45 : சசிகலாவை நீக்கிய பிறகே இணைப்பு நடவடிக்கை என ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்தன. ஒருவேளை சசிகலாவை நீக்கினால், உடனே நீதிமன்றத்தை நாடுவது குறித்து டிடிவி.தினகரன் இல்லத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் ஓரிருவரை அழைத்து டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.

பகல் 1.00 : பகல் 11.30 மணிக்கே அதிமுக தலைமை அலுவலகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் எடப்பாடியின் வருகை தாமதமானதால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு தட்டியது. கடந்த வெள்ளிக்கிழமையும் இதேபோல தாமதமாகி, கடைசியில் இணைப்பு நடக்காமல் போனதால் மீண்டும் அதேபோல ஆகிவிடுமோ? என்கிற பீதி அவர்களிடம் தெரிந்தது.

பிற்பகல் 1.15 : கவர்னர் வித்யாசாகர்ராவ் மும்பையில் இருந்து கிளம்பி வந்து, சென்னை விமான நிலையத்தில் இறங்கினார்.

பிற்பகல் 1.30 : ஓ.பி.எஸ். அணியினர் தங்களின் தர்மயுத்த கோரிக்கைகளில் ஒன்றுகூட முழுமையாக நிறைவேறாததை சுட்டிக்காட்டி, ஓ.பி.எஸ். அணியினர் திடீரென பின்வங்குவதாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கும்படி ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து அழுத்தமாக வலியுறுத்துவதாக சொல்லப்பட்டது. ’பொதுக்குழுவை கூட்டாமல், சசிகலாவை நீக்க வாய்ப்பில்லை’ என எடப்பாடி அணியை சேர்ந்த ஆவடி குமார் கூறினார்.

பிற்பகல் 1.35 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே அவரவர் வீட்டை விட்டு வெளியே செல்ல தயார் நிலையில் இருந்த கான்வாய் வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அவர்கள் இருவருமே உடனடியாக அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் வாய்ப்பு இல்லை என தெரிய வந்தது.

பிற்பகல் 1.45 : இணைப்பு நடவடிக்கையின் முக்கிய திருப்பமாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வந்தனர். பொதுக்குழுவால் நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை, நிர்வாகிகள் கூடி நீக்குவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்பட்டது.

பிற்பகல் 2.05 : ஓ.பி.எஸ். வீட்டில் 20 நிமிடங்கள் ஆலோசனையை முடித்துக்கொண்டு இரு அமைச்சர்களும், வைத்திலிங்கம் எம்.பி.யும் அங்கிருந்து காரில் கிளம்பினர். சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அவரது இல்லத்தில் இருந்து காரில் கிளம்பினார். அவரை மலர் தூவி அவரது ஆதரவாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.  6 மாத இடைவெளிக்கு பிறகு, ஓ.பி.எஸ்.ஸை வரவேற்க அதிமுக தலைமைக்கழகம் தயாரானது.

பிற்பகல் 2.15: அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பி, அவரை வரவேற்றனர்.

பிற்பகல் 2.20 : ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். அவர்களை எடப்பாடி ஆதரவாளர்கள் வரவேற்று, அழைத்துச் சென்றனர்.

பிற்பகல் 2.25 : இரு அணிகளும் இணைந்ததும், இன்று மாலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து பேசினார்.

பிற்பகல் 2.35 : 6 மாத இடைவெளிக்குப் பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ். வந்தார். அவரை இரு அணி தொண்டர்களும் ஆரவாரமாக வரவேற்றனர். மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் ஆகியோர் வாசலில் நின்று பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

பிற்பகல் 2.45 : அதிமுக அலுவலகத்தின் உள்ளே ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் எடப்பாடி கட்டித்தழுவி வரவேற்றார். இதர நிர்வாகிகளும் கரகோஷம் செய்தனர். சிறிது நேரம் மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் ஆலோசனை நடத்தினர்.

மாலை 3.00 : இரு அணிகளின் ஒருங்கிணைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பி.எஸ்., முதல்வர் எடப்பாடி ஆகியோர் பேசினர்.

மாலை 3.15 : ஒருங்கிணைந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் பெயரை எடப்பாடி அறிவித்தார். இணை ஒருங்கிணைப்பாளராக தனது பெயரையும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பெயர்களையும் எடப்பாடி அறிவித்தார்.

மாலை 3.30 : அணிகள் இணைந்த அடுத்த சில நிமிடங்களில் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியானது. அதன்படி துணை முதல்வராக ஓ.பி.எஸ். அறிவிக்கப்பட்டார். அவருக்கு நிதி, வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த மாபாய் பாண்டியராஜனுக்கு, கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம் இருந்த கனிம வளத்துறை, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறை ஓ.பி.எஸ்.ஸுக்கு போனதால்,  உடுமலைக்கு கால்நடை பராமரிப்புத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.  கால் நடைத்துறையை வைத்திருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, செங்கோட்டையனிடம் கூடுதலாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாலை 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் கவர்னர் மாளிகையில் பதவியேற்கிறார்கள்.

 மாலை 3.45 : முதல்வர் எடப்பாடி மற்றும் சீனியர் அமைச்சர்களான செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார் உள்ளிட்டவர்கள் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்தனர். சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, எம்.ஜி.ஆர். சமாதியிலும் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4.30 : கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஓ.பன்னீர்செல்வமும், மாஃபாய் பாண்டியராஜனும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் வித்யாசாகர்ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மாலை 5.15: பதவியேற்பை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம், மாஃபாய் பாண்டியராஜன் மற்றும் அமைச்சரவை சகாக்கள் தலைமைச் செயலகம் வந்தனர். அங்கு துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சராக மாஃபாயும் பதவியேற்றனர், அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், இதர அமைச்சர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாலை 5.20 : துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

 

O Panneerselvam Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment