சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்கும்வரை பேசி பிரயோஜனமில்லை என ஓ.பன்னீர்செல்வம் அணி சீனியரான கே.பி.முனுசாமி கூறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை, போயஸ் கார்டன் பங்களா நினைவு இல்லம் ஆக்குவது ஆகிய இரு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்காக பேச்சுவார்த்தைகள் சூடு பிடித்தன.
ஆகஸ்ட் 18-ம் தேதி மாலையில் இது தொடர்பாக இரு தரப்பும் தனித்தனியாக நீண்ட ஆலோசனை நடத்தினர். எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து ஓ.பன்னீர்செல்வத்தை நேரடியாக சந்தித்தும் பேசினர். ஆனால் ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு வரை எந்த முடிவும் எடுக்காமலேயே இரு தரப்பும் கலைந்து சென்றனர்.
ஓ.பி.எஸ். தரப்பில் இந்த இணைப்பு முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறவராக பலராலும் சுட்டிக் காட்டப்படுவபவர், கே.பி.முனுசாமி. எடப்பாடியின் இரட்டை அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, ‘நாங்கள் வைத்த அடிப்படை கோரிக்கைகளை இன்னும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை’ என பேட்டி கொடுத்தவர் முனுசாமி. அணிகள் இணைப்பு முயற்சி நிறைவு பெறாததை தொடர்ந்து இரு அணிகளின் தொண்டர்களுமே முனுசாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து முனுசாமி கருத்து தெரிவிக்கையில், ‘நான் அழுத்தமான நிலைப்பாட்டில் இருப்பதாக மீடியாவில் செய்திகள் வந்து கொண்டிருப்பதை நானும் அறிவேன். ஒரு கட்சியின் நலன் கருதி. கட்சியில் பணியாற்றும் நிர்வாகிகளின் நலன் கருதி, தொண்டர்களின் நலன் கருதி அந்த அழுத்தமான நிலைப்பாடை நான் எடுக்கிறேன். இதை அணிகளின் இணைப்புக்கு முட்டுக்கட்டை என எடுத்துக் கொள்ளக்கூடாது. தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
எங்களின் தர்மயுத்தத்தின் அடிப்படை நோக்கமே, சசிகலா குடும்பத்தை வெளியேற்றவேண்டும் என்பதுதான். அந்த மூலக்கரு நிறைவேற்றப்படாமல் வேறு விஷயங்களை பேசிப் பயனில்லை. எங்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்களின் கருத்துகளை எங்கள் தலைவர் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்து வருகிறோம். அவர் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்’ என கூறினார் முனுசாமி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.