அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக இன்று மாலையில் முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார். அரசியல் வட்டாரத்தில் இது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நாளொரு மேனியும் பொழுதொரு அணியுமாக அதிமுக உடைந்தபடி இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைய வேண்டும் என்கிற கோரிக்கை இரு அணிகளிலும் குறிப்பிட்ட தரப்பினரால் வற்புறுத்தப்படுகிறது.
அணிகள் இணைப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக தெரிவித்த கோரிக்கைகள் இரண்டு மட்டுமே! ஒன்று, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்யவேண்டும். மற்றொன்று, சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கவேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளிலும் சாத்தியமான அளவில் சில அம்சங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியிருக்கிறார். முதல் கோரிக்கையான சி.பி.ஐ. விசாரணைக்கு பதிலாக, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்துவதாக ஆகஸ்ட் 17-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சி.பி.ஐ. விசாரணை என்றால் அது மாநில அரசின் கட்டுப்பாடைத் தாண்டி செல்லக்கூடும் என்பதால், மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்கும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததாக தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானதுமே ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகளில் ஒருவரான மாபாய் பாண்டியராஜன், ‘இது ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்திற்கு வெற்றி. இரு அணிகளும் இணைவதற்கு வெளிப்படையாக பேசவேண்டிய நேரம் இது’ என ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மைத்ரேயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு..
ஆனால் அதே அணியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவரான கே.பி.முனுசாமி, ‘நாங்கள் கேட்டது சி.பி.ஐ. விசாரணை! இப்போது எடப்பாடி பழனிசாமி தனக்கு தோன்றியதை செய்திருக்கிறார். இதில் நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என ஜகா வாங்கினார். தவிர, சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்கவேண்டும் என்கிற தங்களின் நிபந்தனையும் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்பட வில்லை என முனுசாமி சுட்டிக்காட்டினார். அதாவது, சசிகலாவை இன்னும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கவில்லை என்பதையே முனுசாமி குறிப்பிடுகிறார்.
எடப்பாடியின் அறிவிப்பு இப்படி ஓ.பி.எஸ். அணிக்குள்ளேயே இருவேறு கருத்துகளை உருவாக்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று காலை ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகளில் ஒருவரான மைத்ரேயன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், ‘எனது சக நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள். நமது தலைவர் ஓ.பி.எஸ். மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். அதுவரை கருத்து அவசரப்பட்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்’ என கேட்டுக்கொண்டிருக்கிறார் மைத்ரேயன்.
மைத்ரேயன் கூறியபடியே, இன்று மாலை 5 மணியளவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது அணி நிர்வாகிகளுடன் இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். அந்த ஆலோசனை முடிவில் எடப்பாடியின் இரு அறிவிப்புகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை தெரிவிக்க இருக்கிறார். அதைப் பொறுத்தே மாபாய் பாண்டியராஜன் சொன்ன திசையில் நகர்வு இருக்குமா, கே.பி.முனுசாமி சுட்டிக்காட்டிய பாதையில் நகருமா? என்பது தெரியவரும்.