அதிமுக அணிகள் இணைப்பு : எடப்பாடி -ஓ.பன்னீர்செல்வம் அதிகார பங்கீட்டில் யாருக்கு லாபம்?

அதிமுக அணிகள் இணைப்பு அதிகார பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையிலான அதிகார பங்கீட்டில் யாருக்கு லாபம்? என்கிற விவாதம் நடக்கிறது.

அதிமுக அணிகள் இணைப்பு அதிகார பங்கீட்டில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையிலான அதிகார பங்கீட்டில் யாருக்கு லாபம்? என்கிற விவாதம் நடக்கிறது.

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனி அணி கண்டவர் ஓ.பன்னீர்செல்வம். ஆகஸ்ட் 21-ம் தேதி மாலையில் நடைபெற்ற அதிமுக அணிகள் இணைப்பு மூலமாக துணை முதல்வராகவும், அதிமுக வழிகாட்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் ‘ரீ என்ட்ரி’
ஆகிறார். ஜெயலலிதாவால் முதல்வர் இருக்கையில் அமர வைக்கப்பட்டவர், அதுவும் 3 முறை (ஒரு முறை சசிகலாவால்) அந்த இருக்கையில் அமர்ந்தவர் இப்போது துணை முதல்வர் ஆகிறார் என எடுத்துக் கொண்டால், அது அவருக்கு சறுக்கல்!

ஆனால் சசிகலா குடும்பத்தினரால் அரசியலில் வளர்ந்தவர், பிறகு அவர்களாலேயே துரத்தப்பட்டவர், இன்று அந்தக் குடும்பத்தை கட்சியை விட்டே துரத்திவிட்டு ‘ரிட்டர்ன்’ ஆகிறார் என எடுத்துக்கொண்டால் அவருக்கு இது வெற்றி! ஆனால் சசிகலா குடும்பத்தை துரத்தியதில், ஓ.பன்னீர்செல்வத்தின் பங்கைவிட எடப்பாடி பழனிசாமியின் பங்கையே அதிமுக வரலாறு அதிகமாக குறித்து வைக்கும்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தியானத்திற்கு பிறகு கவிழ இருந்த ஆட்சியை கூவத்தூர் முகாம் மூலமாக காப்பாற்றியவர் சசிகலாதான். ஆனால் பொது ஜனங்கள் மத்தியில் அவரது குடும்பத்திற்கு இருக்கும் அவப்பெயர் காரணமாகவும், சிலபல மேலிட நெருக்கடிகள் காரணமாகவும் அந்தக் குடும்பம் ஒதுங்கியிருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்பினார். டிடிவி.தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்தபோது அவர் மீது எடப்பாடிக்கு உருவான ஆத்திரம், அடுத்து அந்தத் தேர்தலில் பண வினியோக விவகாரத்தில் எடப்பாடி பெயரையும் இழுத்து விட்டதில் உக்கிரமானது.

கடைசியாக டிடிவி.தினகரன் விருப்பம்போல நிர்வாகிகளை நியமித்ததும்தான், அந்தக் குடும்பத்தை மொத்தமாக விரட்டும் முடிவுக்கு வந்தார் எடப்பாடி. ஆக, ஓ.பி.எஸ். கொடுத்த நெருக்கடி என்பதைவிட, டிடிவி.தினகரன் மீது எடப்பாடிக்கு உருவான ஆத்திரமே இந்த இணைப்பை துரிதமாக்கியது. எனவே அணிகள் இணைப்புக்கும், சசிகலா குடும்பத்தை விரட்டியதற்கும் ஓ.பன்னீர்செல்வத்தைவிட அதிக ‘கிரெடிட்’ எடுக்கப் போகிறவர் எடப்பாடிதான்! ‘அரசியலில் தூக்கி விட்டவரையே ஒழித்துவிட்டவர்கள்’ என்கிற விமர்சனம் வைத்தாலும், ஓ.பி.எஸ்.ஸைவிட இதில் எடப்பாடியின் உயரம் அதிகம்!

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவர் தனது தர்மயுத்தமாக முன்வைத்த இரு கோரிக்கைகளும் இணைப்பு நிகழ்ந்த நிமிடம் வரை நிறைவேறவில்லை. ஒன்று, ஜெ.மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை! மற்றொன்று, சசிகலா குடும்பம் முழுமையான நீக்கம்! இதில் இரண்டாவது அம்சத்தை, விரைவில் பொதுக்குழுவை கூட்டி நிறைவேற்றப் போகிறார்கள். ஆனால் இதை 2 மாதங்களுக்கு முன்பே எடப்பாடி தரப்பு சொன்னது. அப்போது அதை ஏற்காத ஓ.பி.எஸ். அணியினர் இப்போது ஏற்க வேண்டிய அளவுக்கு ஏதோ நெருக்கடி என்றுதான் தோன்றுகிறது.

இ.பி.எஸ். அமைக்கும் நீதி விசாரணையை ஓ.பி.எஸ். ஏற்கிறாரா? என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பும் இல்லை. இதையும் கடந்த 2 மாதங்களாக இ.பி.எஸ். அணியினர் நேரம் கிடைத்த போதெல்லாம் ஓ.பி.எஸ். அணியினரிடம் கூறி வந்தனர். ஆக, தர்மயுத்தத்தின் இரு அம்சங்களும் நிறைவேறாத சூழலில் சேர்ந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தில் ஓ.பி.எஸ். இணைந்து விட்டார் என்பதுதான் நிஜம்!

டெல்லி நெருக்கடி ஒருபுறம் என்றாலும், எடப்பாடி ஆட்சி கவிழும் சூழல் இல்லை என்பது முக்கியமான இன்னொரு காரணம். அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு தனி அணியாக பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்க முடியுமா? என்கிற கலக்கம், ஆரம்பத்தில் இருந்த எழுச்சி, நான்கைந்து மாதங்களில் குறைந்துவிட்டதை கண்கூடாக கண்டதால் ஏற்பட்ட பயம்… இப்படி சில நெருக்கடிகளை பட்டியல் இடலாம்.

அதனால்தான் சீனியரான கே.பி.முனுசாமி போன்றவர்களின் தடையை உடைத்துக்கொண்டு இணையும் முடிவுக்கு ஓ.பி.எஸ். வந்தார். அதுவும் மூன்று முறை முதல்வராக இருந்தவர், துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயகுமார் ஒரு பேட்டியில், ‘ஓ.பன்னீர்செல்வம் திரும்பி வந்தால், நிதி அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார். அதற்கு இரு தினங்களுக்கு பிறகு திண்டுக்கல்லில் நடந்த தர்மயுத்தப் பொதுக்கூட்டத்தில், ‘யாரு, யாருக்கு பதவியை விட்டுத் தருவது? ஜெயக்குமாருக்கு எவ்வளவு அகங்காரம்?’ என கொந்தளித்தார் ஓ.பி.எஸ். அவரேதான் இப்போது ஜெயகுமார் விட்டுத்தருவதாக சொன்ன நிதித்துறையுடன் கூடுதலாக வீட்டு வசதித்துறையை மட்டும் வாங்கிக்கொண்டு துணை முதல்வர் ஆகியிருக்கிறார்.

அதிமுக வழிகாட்டும் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பி.எஸ்.ஸுக்கு கெளரவம்தான்! ஆனால் அங்கேயும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி வந்து நிற்கிறார். பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுகவில் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இவர்கள் இணைந்தே எடுப்பார்கள். ஆனால் ஆட்சியில் துணை முதல்வருக்கு அப்படி அரசியல் சட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. அங்கு முதல்வர், வழக்கம்போல முதல்வர்தான்!

ஜெ. அமைச்சரவையில் இடம்பெறாத செங்கோட்டையன் அமைச்சராக இருப்பதுபோல, தங்கள் அணிக்கும் கூடுதலாக ஒரு இலாகாவை ஓ.பி.எஸ். கேட்டு வாங்கியிருக்க முடியும். ஆனால் ஏற்கனவே இருந்த மாஃபாய் பாண்டியராஜன் தவிர, வேறு யாருக்கும் அவரது அணியில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறையை விட்டுக் கொடுத்துவிட்டு சென்ற மாஃபாய்க்கும், இப்போது டம்மியான தமிழ் வளர்ச்சித்துறை கிடைத்திருக்கிறது. அதாவது, பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு பெறும் துறைகள் ஓ.பி.எஸ்.ஸுக்கும், மாஃபாய்க்கும் கிடைக்கவில்லை.

எம்.சி.சம்பத்திடம் இருந்து பறிக்கப்பட்ட கனிம வளத்துறையை கூட ஓ.பி.எஸ்.ஸிடம் வழங்காமல், தீவிர ஓ.பி.எஸ். எதிர்ப்பாளரான சி.வி.சண்முகத்திடம் வழங்கியிருக்கிறார் எடப்பாடி. அதேபோல டிடிவி.தினகரன் ஆதரவாளரான உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இருந்து பறிக்கப்பட்ட வீட்டு வசதித்துறைக்கு பதிலாக டிடிவி.யின் மற்றொரு ஆதரவாளரான பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்து கால் நடைத்துறையை பறித்து உடுமலைக்கு வழங்கியிருக்கிறார்.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை போயிருக்கிறது. அதாவது, எதற்காகவும் ஜெயலலிதாவின் நியமனங்களில் கை வைக்காத எடப்பாடி, டிடிவி ஆதரவாளர்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்களை டம்மியாக்கவும் துணிந்துவிட்டார்.

கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய பிடி கிடைக்காமலேயே ஓ.பி.எஸ். உள்ளே வந்திருக்கிறார். எப்போதும் முழு மேக்கப்பில் வலம் வரும் ஓ.பி.எஸ். , அதிமுக அணிகள் இணைப்பு வைபவத்தின்போது காய்ந்த முகத்துடன் காணப்பட்டார். பெரிய உற்சாகமும் அவரிடம் இல்லை. ஒருவேளை அவரை இணைய வைத்த ‘லாபி’, சில பல மாதங்களில் அவருக்கு சாதகமாக ஏதாவது சித்து விளையாட்டை அரங்கேற்றலாம். எடப்பாடி பழனிசாமி அரசியல் காய் நகர்த்தல்களும் படு உஷார்தான். ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள்! பொறி கிளம்பாமல் இருந்தால் சரிதான்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close