அமித்ஷா வருகைக்கு முன்தினம் இணைப்பு அறிவிப்பு : எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகளின் டீலிங் பின்னணி

அமித்ஷாவின் வருகைக்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 21-ம் தேதி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகளின் இணைப்பை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அருண் ஜனார்த்தனன்

அமித்ஷாவின் வருகைக்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 21-ம் தேதி ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிகளின் இணைப்பை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இரு அணிகளின் இணைப்புக்கான நிபந்தனைகள் பேசி முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இடையிலான இணைப்பு நடவடிக்கைகள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வெள்ளிக்கிழமை மாலையில் நடத்திய நீண்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இணையும் முடிவுக்கு வந்தனர்.

சனிக்கிழமை மதியம் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘பேச்சுவார்த்தை சுமூகமாக போகிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவை அறிவிப்போம்’ என்றார். இரு அணிகளின் முக்கியத் தலைவர்கள் வட்டாரங்களில் நாம் பேசியபோது, ‘இணைப்புக்கான நிபந்தனைகள் முழுமையாக பேசி முடிக்கப்பட்டுவிட்டன. அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன் தினமான திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்’ என்றார்கள்.

ஆகஸ்ட் 22-ம் தேதி, அதாவது வருகிற செவ்வாய் கிழமை முதல் 3 நாட்கள் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகத்தில் முகாமிட்டு கட்சிப் பணிகளை முடுக்கி விட இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பேசி முடிக்கப்பட்டிருப்பது அப்படியே நடந்தால், ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் கைகோர்த்து சென்று அமித்ஷாவை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இரு அணிகளும் இணைய எடுக்கப்பட்ட முடிவை வெள்ளிக்கிழமை இரவே இரு தரப்பில் இருந்தும் டெல்லிக்கு தெரிவித்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்திய, ‘ஜெ. மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை, சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவது’ ஆகிய இரு கோரிக்கைகளுமே இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. மூன்றாவது கோரிக்கையாக, ‘ஓ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதவி அல்லது சசிகலாவை நீக்குவதால் காலியாகும் பொதுச்செயலாளர் பதவி’ என்கிற மறைமுக கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுக.வில் பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் நிரம்பிய அதற்கு இணையான ஒரு பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்க ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதோடு, துணை முதல்வர் பதவியும் ஓ.பி.எஸ்.ஸுக்கு வழங்க இருக்கிறார்கள். தவிர, ஓ.பி.எஸ்.ஸின் சகாக்கள் இருவருக்கு அதிகாரம் மிக்க இரு அமைச்சர் பதவிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் சம்மதம் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக மாநில பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெறுகிற பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை இலாகாக்களை ஓ.பி.எஸ். தரப்பில் கேட்கிறார்கள்.

பிரிவுக்கு முந்தைய அமைச்சரவையில் ஓ.பி.எஸ்.ஸுடன் அவரது அணியை சேர்ந்த மாஃபாய் பாண்டியராஜன் மட்டுமே அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதலாக பெறும் இன்னொரு அமைச்சர் பதவியை தனது அணியின் சீனியர் எம்.எல்.ஏ. ஒருவருக்கு ஓ.பி.எஸ். வழங்க முடியும். அணிகள் இணைப்புக்கு பிறகு, ஒரு மாத காலத்தில் பொதுக்குழுவை கூட்டி, சசிகலாவை நீக்கும் முடிவையும் இவர்கள் எடுத்திருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்

இணைப்புக்கான நிபந்தனைகள் பேசி முடிக்கப்பட்டுவிட்டதை உறுதி செய்த ஓ.பி.எஸ். அணி நிர்வாகி ஒருவர், குறைந்தபட்சம் தங்கள் அணியின் 10 தலைவர்களுக்கு ஆட்சியில் அல்லது கட்சியில் உயர் பதவிகள் தர இ.பி.எஸ். அணி சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறினார். ‘துணை முதல்வர், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவிகள் தவிர, கட்சி அமைப்பில் மேலும் பல மாவட்டச் செயலாளர் பதவிகளையும், மாநில நிர்வாகிகள் பதவிகளையும் எங்கள் அணிக்கு தர இருக்கிறார்கள்’ என குறிப்பிட்டார் அவர்.

ஓ.பி.எஸ். தரப்பில் முதல்வர் பதவி பற்றிய பேச்சை எடுத்தபோது, ஆரம்பகட்டத்திலேயே இ.பி.எஸ். தரப்பில் அதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். ஓ.பி.எஸ். முன்வைத்த கோரிக்கைகள் எதையும் முழுமையாக நிறைவேற்றாமல், இணைவதில் அவரது அணிக்குள் கடும் எதிர்ப்பு எழவே செய்தது. ஆனால் அதிகாரத்தை விட்டு இறங்கி 6 மாதங்களை கடந்துவிட்ட ஓ.பி.எஸ்., இந்த இணைப்பு நடவடிக்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டதாகவும் தகவல் இருக்கிறது.

குறிப்பாக டெல்லியில் பா.ஜ.க. மேலிடத்தில் இருந்தும், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தரப்பில் இருந்தும் வந்த அழுத்தம் இந்த இணைப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. தங்கள் கோரிக்கை நிறைவேறாமல் இணைவதில் ஓ.பி.எஸ்.ஸுக்கும் கவலைதான். ஆனாலும் இதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை என்கிறார்கள்.

ஆனால் இந்த இணைப்புக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் ஒருவர் மறுக்கிறார். அவர் கூறுகையில், ‘தமிழகத்தின் நலனுக்காவும், சசிகலாவின் ஆதிக்கத்தை அகற்றவுமே இரு அணிகளின் இணைப்பை விரும்புகிறோம். முதல்வர் பதவியையோ, பொதுச்செயலாளர் பதவியையோ விட்டுக்கொடுக்க இ.பி.எஸ். பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாமல் ஏன் இணையவேண்டும்? என்பது ஓ.பி.எஸ். அணியின் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலரது வாதம். ஒருவேளை இதுவே அந்த அணியில் ஒரு பிளவை உருவாக்கலாம், இணைப்புக்கு எதிராக சிலர் அறிக்கை விடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் திங்கட்கிழமை இணைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக இரு தரப்பிலும் எங்களுக்கு தகவல் தந்திருக்கிறார்கள்’ என்றார் அவர்.

இ.பி.எஸ். அணி மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகையில், ‘இரு அணிகளிலும் அதிகாரம் மிக்க பதவிகளில் இல்லாத சிலர் இணைப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்கள். டெல்லியில் இருந்து வகுத்துக் கொடுத்த பார்முலா, இதில் ஒரு உடன்பாடை எட்ட வைத்திருக்கிறது. ஆகஸ்ட் 22-க்குள் நாங்கள் ஒரே அணியாகி விடுவோம்’ என்றார் அவர்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, டிடிவி.தினகரன் அண்மையில் மேலூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்ததை புறம் தள்ள முடியாது. ஒருவேளை தி.மு.க. தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறும்.

இது குறித்து டிடிவி.தினகரன் தரப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அதிகபட்சம் 10 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தால் இவ்வளவு முடிகிறது என்றால், எங்களின் பலம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 20 எம்.எல்.ஏ.க்களுடன் எங்களது கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மூவர் மற்றும் வேறு பல எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி மொத்த கட்சியே எங்களின் முடிவுக்காக காத்திருக்கிறது’ என்றார் அவர்.
அணிகள் இணைந்தாலும், குழப்பம் தீரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close