அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை கோரி டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி (நாளை) நடைபெறும் என்று கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி அட்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி (நாளை) காலை 10.35 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் விவகாரம் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பொதுக்குழு, செயற்குழுவுக்கு தடைகோரி டி.டி.வி தினகரன் ஆதரவாளரான வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்திற்காக வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய வெற்றிவேல் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. மேலும், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ராஜீவ் சத்தோர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கியோர் அடங்கியஅமர்வு முன்பு மாலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் ராமானுஜம், அதிமுக அம்மா-புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் ஒரு கட்சியே இல்லை. தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயரில் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அதிமுக என்ற பெயரை பயன்படுத்த முடியாது. கட்சிப் பெயரை முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் தான். பொதுக்குழுவுக்காக அனுப்பப்பட்ட நோட்டீஸில் எந்த கையெழுத்தும் இல்லை என வாதாடினார்.
அதேபோல், "தேர்தல் ஆணையத்தின் முன்னர், அதிமுகவின் விவகாரம் விசாரணையில் இருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டியிருப்பது சட்டப்படி செல்லாது. சசிகலா என்னை தான் துணை பொதுச் செயலாளராக நியமித்தார். எனக்கு அழைப்பிதழே அனுப்பாமல், அனுமதி கேட்காமல் இப் பொதுக்குழு கூட்டப்படுகிறது. கட்சி, சின்னம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் எனக்கே உள்ளது. இரு அணிகளின் இணைப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை, ஆகவே இவர்கள் கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது" என டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்ரா சம்பத் வாதாடினார்.
முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினராக கூட இல்லாத தினகரனுக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை. பொதுக்குழுவை கூட்ட எங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. பொதுக் குழுவுக்கான அழைப்பிதழ் அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அணிகள் சார்பிலேயே பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இரு அணிகள் இணையக் கூடாது என தேர்தல் ஆணையம் எங்கும் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணைய உத்தரவை நாங்கள் மீறியிருந்தால் வெற்றிவேல் தேர்தல் ஆணையத்தையே அணுகியிருக்க வேண்டும். கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கவே, வெற்றிவேல் இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். ஆக, இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்றி இரவு 7.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். எனவே, அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.