பிளவுபட்டுள்ள அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பிளவுபட்டு குழப்பத்தில் தவித்து வருகிறது. இரண்டாக பிளவுபட்ட அதிமுக அணி, பின்னர் மூன்றாக பிளவுபட்டது. ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணிகள் இணைவதற்கு கால அவகாசம் கொடுத்திருந்தார் டிடிவி தினகரன். ஆனால், அணிகள் இணைவதாக தெரியவில்லை என்பதால், கட்சியை முன்னெடுத்து நடத்துவதாக மீண்டும் களமிறங்கினார் தினகரன்.
ஆனால், டிடிவி தினகரனின் வருகையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி எதிர்த்து வருகிறது. டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, டிடிவி தினகரன் தலைமையில் மதுரை மாவட்டம் மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதில், பேசிய டிடிவி தினகரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணியை கடுமையாக விமர்சித்தார். இருப்பினும் அவர் எதிர்கட்சியை விமர்சிப்பதை தவிர்த்தது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் கோவில் விழா ஒன்றில் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது: பிளவுபட்டுள்ள அதிமுக-வின் இரு அணிகளும் விரைவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. அது விரைவிலே நடக்கும், அதனை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிபந்தனைகளை ஏற்பது குறித்து குழுக்கள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அது ரகசியம் என்பதால், வெளியில் சொல்ல முடியாது.
ஓபிஎஸ் பிரதமரை சந்தித்துள்ளார். இரு அணிகள் இணைப்பில் பாஜக முக்கிய பங்கு வகிக்கிறதா?
இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துள்ளாரே தவிர, அறிவுரை வழங்குவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பிரதமரை சந்திப்பது என்பது வழக்கமாக நிகழ்வு தான், அந்த அடிப்படையில் அவர் பிரதமரை சந்தித்திருக்கிறார். அணிகள் இணைவது குறித்து குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே, நல்ல முடிவு வரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
அன்புமணி ராமதாஸ் கல்வித்துறை குறித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அன்று விவாதத்தில் பங்கேற்காததன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியபோது, அன்று நான் நீலகிரியில் இருந்ததால் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.