ஒருமாத காலத்திற்கும் மேலாக சிறையிலிருந்த டிடிவி தினகரன் ஜாமீனில் தற்போது ரிலீசாகி உள்ளார். முன்னதாக, கட்சிப் பணிகளில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறிய தினகரன், சென்னை கிளம்புவதற்கு முன், டெல்லி விமான நிலையத்தில் அளித்த பேட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். "நான் கட்சிப் பணிகளில் இருந்து விலகினால் தானே தொடர்வதற்கு... என்னை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே உரிமை உண்டு" என்று தினகரன் கூறியிருப்பது தான் அதற்கு காரணம்.
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அணி பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்காமல் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் என்று தினகரன் கூறியிருப்பது, ஓ.பி.எஸ். அணி முன்வைத்த 'மன்னார்குடி உறவுகளை முற்றிலுமாக கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும்' என்ற அடிப்படை கோரிக்கைக்கே 'ஆப்பு' வைத்துள்ளது.
இதனிடையே, 'சிறையிலிருந்து வெளியே வரும் தினகரனை நாங்கள் சந்திக்க மாட்டோம்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
ஆனால், 'கட்சிப் பணியைத் தொடர டி.டி.வி.தினகரனுக்கு உரிமை உண்டு' என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று கூறியிருப்பது முதல்வர் பழனிசாமி அணியை அதிரவைத்துள்ளது. திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கட்சியிலிருந்து தினகரனை நாங்கள் நீக்கவில்லை. அவரேதான் வெளியே சென்றார். ஆகவே, கட்சிப் பணியைத் தொடர டி.டி.வி.தினகரனுக்கு உரிமை உண்டு. அது அவருடைய விருப்பம்." என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, இனிதான் உண்மையான சோதனையை அனுபவிக்கப் போகிறது என்பதை அவரது அமைச்சர்களே தங்களது முரண்பட்ட கருத்துக்கள் மூலம் இன்று உணர்த்திவிட்டனர்.
போதாத குறைக்கு, 'கட்சியில் தினகரன் தொடர்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார்' என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது தினகரன் சென்னை வந்தடைந்துள்ளார். இனி ஓ.பி.எஸ். அணியின் நிலை? எடப்பாடி பழனிச்சாமியின் நிலை? இருபிரிவாக உள்ள அமைச்சர்களின் நிலை? தினகரனின் நிலை? இதற்கான விடை மிக விரைவில் தெரியவரும்.