சென்னையில் நாளை அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் : ஓ.பி.எஸ். அணியினரும் பங்கேற்பார்களா?

அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்ந ஆக.21-ல் நடக்கிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

சென்னையில் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக இதில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

அதிமுக.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இணைப்பை உறுதி செய்யும் அறிவிப்பு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அன்று (21-ம் தேதி) அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தை முதல்வரும், தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூட்டுகிறார்.

இதற்கு முன்பாக, அதாவது 21-ம் தேதி காலைக்குள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் முழுமை பெற்றுவிட்டால் ஓ.பி.எஸ். அணியில் உள்ள தலைமைக்கழக நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம் (பொருளாளர்), மதுசூதனன் (அவைத்தலைவர்), செம்மலை (அமைப்புச் செயலாளர்), நீலாங்கரை முனுசாமி (மீனவரணி செயலாளர்) உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகளின் மொத்த எண்ணிக்கை 38. இவர்களின் 29 பேர் கையெழுத்திட்டு நிறைவேற்றிய தீர்மானம் மூலமாகவே கடந்த 10-ம் தேதி டிடிவி.தினகரனின் நியமனம் செல்லாது என கூறினர். அந்தக் கூட்டத்தில் பங்கேற்காக கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை ஆகியோரும் ஆகஸ்ட் 21-ம் தேதி கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தலைமைக்கழக நிர்வாகிகளில் 31 பேர் எடப்பாடி அணியில் இருப்பதாக தெரிய வருகிறது.

அதிமுக.வின் சட்டதிட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளர் இல்லாத சூழலில் அவரால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் கட்சியை வழிநடத்த வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேயே ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகளை கூட்டி, முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி.தினகரன் அணியில் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான தளவாய் சுந்தரம், விவசாய அணி செயலாளரான துரை கோவிந்தராஜ் ஆகிய இருவர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் தளவாய்சுந்தரம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் தொடர்வதால் வெளிப்படையாக டிடிவி.தினகரனுடன் பங்கேற்பதை தவிர்க்கிறார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி கூட்டும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்க வாய்ப்பு குறைவு.

தர்மயுத்தம் என்ற பெயரில் ஓ.பி.எஸ். முன்வைத்த இரண்டு கோரிக்கைகளும் (சசிகலா நீக்கம், ஜெ.மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை) முழுமையாக நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் இணைவதை ஓ.பி.எஸ். அணியின் கே.பி.முனுசாமி உள்ளிட்ட சிலர் எதிர்க்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அதிமுக.வில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆனால் இன்னொரு தரப்பினர், ‘பொதுக்குழுவால் நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை, பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும். எனவே ஆகஸ்ட் 21-ம் தேதி கூட்டத்தில் அடுத்த 10 நாட்களில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேறும். அந்தப் பொதுக்குழுவுக்குள் இரு அணிகளும் முழுமையாக இணையும். அதில்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் நிறைவேறும்’ என்கிறார்கள்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினால், நீதிமன்றத்தை அணுக டிடிவி.தினகரன் தரப்பு தயாராகி வருகிறது. இதனால் அதிமுக.வின் ஒவ்வொரு அசைவும் அரசியல் வட்டாரங்களிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk office bearers meeting to be convened tomorrow may ops faction leaders participate

Next Story
ஸ்டாலின் வழக்கறிஞர் அல்ல: ஓபிஎஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express