காவல்துறையின் தடையை மீறி உண்ணா விரதம் இருக்க முயன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பேட்டி கொடுக்க காவல்துறையினர் மறுத்ததால் அவர் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
சட்டபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்ககையை மாற்ற கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சட்டசபையின் இந்த நடவடிக்கையை கண்டித்து உண்ணா விரதம் இருக்கப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காவல்துறையினர் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
ஆனாலும் காவல்துறையின் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த அதிமுகவினர் கருப்பு சட்டையுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடினர். இதனால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் அனைவரையும், எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே எழும்பூர் மைதானத்தில் இருந்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டியை பாதியில் முடித்தக்கொண்டு தனது கோபத்தை காவல்துறையினரிடம் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்த பின்னரும், சபாநாயகர் அதை ஏற்கவில்லை. தற்போது எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் வழங்கியிருந்தோம். ஆனால் 3 மாதமாக அந்த கடிதத்தை கிளப்பில் போட்டுள்ள சபாநாயகர் நடுநிலையாக இருக்க மறுத்து வருகிறார். சட்டசபை அதிமுகவினருக்கு அநீதி இழைக்கிறது.
நேற்று சட்டசபை முடிந்தவுடன் ஸ்டாலினும் ஒபிஎஸ்-ம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். அதிமுகவை சிதைக்க வேண்டும் உடைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. எம்எல்ஏக்கள் ஆதரவு முக்கியம். எம்எல்ஏக்கள் அடிப்படையில் தான் இருக்கை ஒதுக்க வேண்டும். ஆனால் சட்டசபை விதிகளில் இடமில்லை என்று சபாநாயகர் சொல்கிறார்.
இது தவறான வாதம் சட்டத்தில் இடம் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன் வைத்தியலிங்கம் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கிவிட்டோம். ஆனால் சபாநாயகர் ஒபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil