அதிமுக அணிகள் பிளவுபட்டு இருந்த நிலையில், தினகரன் எடப்பாடி அணியினரால் விலக்கப்பட்டார். இந்நிலையில் தனித்தனியாக இருந்த ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் இணைந்தன. சசிகலா, தினகரன் இருவரையும் விலக்கி வைக்க அவர்கள் முடிவெடுத்தனர்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தினகரன் அணியினர் 22 எம்.எல்.ஏக்கள் தனி அணியாக இயங்கி வருகின்றனர். எடப்பாடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கவர்னரை சந்தித்து மனுவும் அளித்தனர்.
இதனால் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளும் பெரும்பான்மை இழந்த எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்நிலையில் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்தில் 108 எம்.எல்.ஏக்கள் வரை கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, வரும் 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. இதற்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுக்குழு செல்லாது என்று தினகரன் அறிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளார். அதில், 'அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்த நீதிபதி கார்த்திகேயன், 'வரும் 11-ஆம் தேதி திங்கட்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.