திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் என்பவரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தார். இதனையொட்டி திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து போஸ்ட்டர்களும், பேனர்களும், சுவரொட்டிகளும், சுவர்களில் விளம்பரங்கள் எழுதியும் அதிமுக நிர்வாகிகள் வாழ்த்துகளை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் திருச்சி மாநகர் விமான நிலைய பகுதியில் அதிமுக செயலாளர் ஏர்போர்ட் விஜி என்பவர் தலைமையில் விமான நிலையம் எதிரே உள்ள அரசு சுகாதாரத்துறை பணிமனை வளாக சுவரில் சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் உள்ளவர்களின் பெயர்களில் ஏர்போர்ட் பகுதி செயலாளர் விஜி பெயரை மட்டும் மர்ம நபரகள் மை ஊற்றி அழித்திருந்தனர்.
இதனால் கோபமடைந்த அப்பகுதி 65-வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் விமான நிலைய காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து விமான நிலைய போலீஸார் அதிமுகவினரை சமாதானப்படுத்தி கலைந்துப்போகச்சொன்னபோதும், அதையும் மீறி சாலை மறியல் செய்ததால் போலீஸாருக்கும்-அதிமுகவினருக்கும் இடையே சிறு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பின்னர், இது விமான நிலையம் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் கலைந்து செல்லுங்கள், செல்ல மறுத்தால் எங்கள் கையை மீறிச்சென்றால், நடக்கும் பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என போலீஸாரின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுவர் விளம்பரம் தொடர்பாக அதிமுகவினரின் திடீர் மறியலால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“