2021 தமிழக சட்டசபை தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவாதமே, கடந்தவாரம் முழுவதும் ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக இருந்து வந்த்து. இந்த செயலை கண்டித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகங்களுக்கு யாரும் பேட்டியளிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்று எச்சரித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர், 2021 தேர்தலிலும் அவர்தான் முதல்வர் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆரம்பித்துவைத்த விவாதம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ஆர்.வி. உதயகுமாரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் அக்கட்சியில் விஸ்வரூபம் எடுத்தது.
போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம் தான் முதல்வர் என்பதை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த விவகாரம் கட்சி தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள், திண்டுக்கல் வரை நீண்டது
இதனிடையே, ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, கட்சித்தலைமையின் உத்தரவுக்கு தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டுப்பட வேண்டும். மீறினால், தக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டு பிரிவாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், மேற்கு மாவட்ட செயலாளர் ஆக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனையும் கட்சித்தலைமை நியமித்தது
இதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் சீனிவாசன் சார்பில். திண்டுக்கல் முழுவதும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழ் போஸ்டரில் தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் நன்றி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கில மொழியிலான போஸ்டரில், முதல்வர் பன்னீர்செல்வம், துணை முதல்வர் பழனிசாமி என்று குறிப்பிடப்பட்டிருந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேனியில் நடைபெற்ற போஸ்டரில் ஓபிஎஸ் தான் முதல்வர் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திண்டுக்கல்லில் அதே போல போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட, மாவட்ட செயலாளர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில், முதல்வர் ஒ.பி.எஸ். என்றும் துணை முதல்வர் ஏ.பி.எஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ அச்சுப்பிழையாக நடந்திருக்கும் என்று சமாதானம் கூட சொல்ல முடியாது. அச்சுப்பிழை நடந்திருந்தாலும், அதை ஒட்டலாமா? இவ்வளவுதானா அதிமுக தொண்டர்களின் கட்சி அறிவு?
ஏற்கனவே கட்சியில் மேற்படி பிரச்சினை நடந்து வரும் நிலையில், இந்த போஸ்டரை அனுமதித்ததன் மூலம், திண்டுக்கல் சீனிவாசனின் நிலைப்பாடும் இதுதானா என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.அமைச்சர்கள் மட்டத்திலேயே, இந்த முதல்வர் வேட்பாளர் விவகாரம் தீவிரமாக உள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் கட்சித்தலைமை கையை பிசைந்து கொண்டுள்ளது என்பதே இப்போதைக்கு நிதர்சனம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil