விரைவில் இரு அணிகளும் இணையும்: அவசர கூட்டத்திற்கு பின் துணை சபாநாயகர் பேட்டி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்தது

By: Updated: August 1, 2017, 07:21:59 PM

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என டிடிவி தினகரன் விதித்த 60 நாள் கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், இதுவரை இரு அணிகளும் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், ஆகஸ்டு 5ஆம் தேதி அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தலைமை கழகத்துக்கு வர வேண்டும் என டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தினகரன் கூறுகையில், “துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையிலும், கட்சியின் தொண்டனாகவும் என்னுடைய முதல் பணி கட்சியை பலப்படுத்துவதே. அதனை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு பின்னர் தொடர்வேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பேன்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர். அதனால் தான் கொஞ்ச நாட்கள் நான் கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறியிருந்தேன். தற்போது, கட்சியை ஒன்றிணைத்து, கட்சியை பலப்படுத்துவதும் மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதுமே எனது நோக்கம்” என்று கூறினார்.

தினகரனின் இந்த பேட்டியை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு நேற்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரு அணிகளின் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்பட்டது. குறிப்பாக, இரு அணிகளும் இணையும் போது, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர்வார் என்றும், ஓ.பி.எஸ். அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி தருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. கட்சியை ஓ.பி.எஸ். வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையிலயே இரு அணிகளும் இணைய முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடந்த இந்த கூட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. கூட்டத்திற்குப் பின் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு விரைவில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இதன்பின் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எழுச்சியாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இரு அணிகளின் பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. எல்லோரும் விரும்புவது ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’. அதிமுக அம்மா அணி அதன் முடிவில் தெளிவாக உள்ளது. எங்கள் அணியின் சார்பில் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவது எடப்பாடி பழனிச்சாமி தான்” என்றார்.

இந்த நிலையில், நாளை பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து தினகரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதை அடுத்து, தினகரன் நாளை சசிகலாவை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Admk two teams will merge soon says deputy speaker pollachi jayaraman

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X