சென்னையில் ஓர் ஆழ்கடல் மீன்பிடிப் பயணம்!!

ஆழ்கடல் மீன்பிடிப் பயணம், சாகசங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு ஓர் நல்ல தேர்வாக அமையும்.

சென்னை, தமிழகத்தின் தலைநகராக விளங்குவதோடு மட்டுமல்லாமல், ஓர் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் கடற்கரை, பூங்கா, ஷாப்பிங் என சுற்றிப் பார்க்காமல் மீண்டும் ஊர் செல்வதில்லை. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மட்டுமல்லாமல், சென்னை வாசிகளே வார இறுதி நாட்களை எங்காவது சென்று கழிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.

சென்னையின் மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்து பகுதிகளிலும் வார விடுமுறையை கழிப்பதற்கு போதுமான இடங்கள் உள்ளன. ஆனால், கிழக்கில் இருப்பது கடல். வேண்டுமெனில் கடற்கரைக்கு சென்று வார விடுமுறையை கழிக்கலாம். அப்படித் தான் சென்னை வாசிகள் செய்து வருகின்றனர். ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் பயணம் மூலம் அந்த தடை தற்போது உடைக்கப்பட்டுள்ளது. கடற்கரையை தாண்டி கடலினுள் சென்று மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வரலாம்.

இந்த ஆழ்கடல் மீன்பிடிப் பயணம், சாகசங்கள் செய்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு ஓர் நல்ல தேர்வாக அமையும். சிறிய; ஆனால், வளர்ந்து வரும் இச் சந்தையை தேர்வு செய்திருக்கும் இத்தொழிலை செய்பவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை இறக்குமதி செய்கிறார்கள்.

பாப்பிங், ஜிக்கிங், ட்ரோலிங், காஸ்டிங் என பல்வேறு வகையான மீன்பிடி முறைகளுக்கு தகுந்தாற்போல் கட்டணங்கள் வசூலிக்கபப்டுகின்றன. துறைமுகத்தில் எடுக்க வேண்டிய பாஸ், கிளப் விருந்தினர் கட்டணம், மீன்பிடி சாதனங்கள், பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் இந்த கட்டணங்களுக்குள் அடக்கம்.

இதுகுறித்து பயண ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, இந்த விளையாட்டுக்காக பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், இந்த பயனத்தை நாங்கள் சென்னையிலேயே ஏற்பாடு செய்து தருகிறோம் என பெருமிதம் கொள்கின்றனர்.

மேலும், “ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்”-யிடம் இருந்து தேவையான அனுமதிகளை பெற்று வைத்துள்ளோம். கடலில் பயணம் செய்பவர்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம். பயணத்திற்கு முன்னரே, துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விடுவோம். வானிலையை முதலில் கணக்கிட்டு பின்னர் பயணத்தை ஆரம்பிப்போம். அனைவருக்கும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் வழங்கப்படும். கடலடி பாறைகள் இருக்குமிடத்துக்கு செல்ல சுமார் ஐந்து நாட்டிகல் மைல்கள் செல்ல வேண்டும். சில இடங்களில் 70 அடி ஆழத்தில் கடலடி பாறைகள் இருக்கும், சில இடங்களில் சுமார் 230 அடி ஆழத்தில் கடலடி பாறைகள் தென்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில்,”பயணத்திற்கு முன்னரே எங்களிடம் தெரிவிக்க வேண்டும். பெரிய படகு என்றால் கப்பல் இயக்குநரகத்தின் அனுமதி பெற வேண்டும். அதேசமயம், சில நேரங்களில் மீனவர்கள் கூட அவர்களுடன் சிலரை படகில் ஏற்றிச் செல்வர். அதற்கு குறிப்பிட்ட தடை எதுவுமில்லை. ஏதேனும் பிரச்னை என்றால் நாங்கள் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவோம். இதுவரை கொடிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

கார்ப்பரேட் மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மட்டுமல்லாமல், படகு பயணத்தை விரும்பும் சாதாரண மக்களும் இதற்கு விரும்பிச் செல்கின்றனர். சூரிய உதயத்தை ரசிக்கவும், பிறந்தநாள் கொண்டாட்டதிற்காகவும் கூட பலர் இது மாதிரியான கடல் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close