Advertisment

மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் : ஜெனிவாவில் இருந்து திரும்பிய வைகோ பேட்டி

மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் என ஜெனிவாவில் இருந்து திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
india will change it's stand in tamil eelam, vaiko return from jeneeva, vaiko return after UN human rights council meeting, vaiko interview at chennai airport

மாநிலக் கட்சிகள் வலுப்பெறும்போது, இந்தியாவின் ஈழ எதிர்ப்பு மாறும் என ஜெனிவாவில் இருந்து திரும்பிய வைகோ பேட்டியளித்தார்.

Advertisment

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்டோபர் 1-ம் தேதி இரவு 7 மணியளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, நிர்வாகிகளான மல்லை சத்யா, கணேசமூர்த்தி உள்ளிட்டவர்களின் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

பின்னர் அங்கு நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: ஜெனிவாவில் நடைபெற்ற 36-வது ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க விசாவுக்கு நான் விண்ணப்பித்தபோது, விசா கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் கடந்த 16 ஆண்டுகளாக, 4 முறை எனக்கு விசா மறுக்கப்பட்டது.

நான் தலைவராக நேசிக்கும் பிரபாகரன் கேட்டுக்கொண்டபடி, கடைசியாக 2001-ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஈழத்தமிழர் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டேன். இந்த முறை அங்குள்ள தமிழ் அமைப்புகள் உண்மையான நிலைமையை சுவிஸ் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியபிறகு, செப்டம்பர் 16-ம் தேதி எனக்கு அனுமதி கிடைத்த தகவல் வந்தது.

உடனே விமான டிக்கெட் எடுத்து, 17-ம் தேதி பிற்பகல் ஜெனிவா சென்று சேரும் வரை எனது பயணம் குறித்து யாருக்கும் நான் தகவல் கூறவில்லை. முதல் நாள் (18-ம் தேதி காலையில்) நான் பேசியபோது சிங்கள அதிகாரிகள் 7 பேர் வரவில்லை. கடந்த அமர்வுக்கும் அவர்கள் வரவில்லையாம். முதல் நாள் அமர்வில், ‘இலங்கையில் நடைபெற்றது மனித உரிமை மீறல் அல்ல. இனப் படுகொலை. உலகத் தமிழர்கள் மத்தியில் இதற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என பேசினேன்.

மூன்றாவது நாள் இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய போர்க்குற்றவாளிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஐநா பொதுச்செயலாளரை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நான் குறிப்பிட்டதை தெரிந்துகொண்டு, அவர்கள் 7 பேரும் என்னைச் சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். பிறகு தமிழ் அமைப்புகளின் முறையீடை தொடர்ந்து, ஐநா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது,

சிங்களர்களின் இந்த தாக்குதல் முயற்சிக்கு தமிழகத்தில் இருந்து கண்டனம் தெரிவித்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பொது வாக்கெடுப்பு என்கிற கருத்தை ஈழத்தில் இருந்துகூட யாரும் முன்வைக்காத நேரத்தில் நான் சொன்னேன். இன்று அதுவே இலக்கு என அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசு காஷ்மீரை மனதில் வைத்து இதை ஏற்காது. மன்மோகன் அரசு ஈழ இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி என்றால், நரேந்திர மோடி அரசு நம்ப வைத்து கழுத்தறுத்த அரசு. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த நிலை மாறும். மாநில கட்சிகளின் கூட்டமைப்பு வலுப்பெறும். சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், தமிழக வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் மதிமுக தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கும். இவ்வாறு வைகோ கூறினார்.

முன்னதாக அபுதாபி விமான நிலையத்திலும் வைகோவுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

 

Vaiko Mdmk Tamil Eelam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment