கதிராமங்கலம், நெடுவாசல் போல கூடங்குளத்திலும் மீண்டும் போராட்டம் துளிர்க்காமல் தடுக்கவே போராட்டக் குழுத் தலைவர்களை அரசு முடக்குவதாக கூறுகிறார் முகிலன்.
கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு பொறுப்பாளர்களில் ஒருவரும், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருமான முகிலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கூடங்குளம் அணு உலை போராட்ட வழக்கில் 11 வழக்குகளுக்கு வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஆஜராக வேண்டும் என எனது சொந்த ஊரான சென்னிமலையில் எங்களது வீட்டு கதவில் நீதிமன்ற அழைப்பாணையை கூடங்குளம் காவல்துறையினர் ஒட்டி சென்றனர். அப்போது நீதிமன்ற அழைப்பாணையை நிராகரித்து செல்லவில்லை. நீதிமன்றம் செல்லாததற்கு என் மீது பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டால் அதையும் சந்திப்பது என முடிவு செய்திருந்தேன்.
என் மீதான அனைத்து வழக்குகளுக்கும் (11 வழக்கு) தற்போது வள்ளியூர் நீதிமன்றத்தில் பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் கூடங்குளம் அணு உலை போராட்ட வழக்கில் 2 வழக்குகளுக்கு Cr.no:70/12, sec 121, 143, 188, 153(a), 341, 342, 500, 506(1), IPC 7(1)(a) CLA Act Cr.no:39/13, sec 147, 188, 153(a), 291 IPC வள்ளியூர் நீதிமன்றத்தில் ஜூலை 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என எனது சொந்த ஊரான சென்னிமலையில் எங்களது வீட்டு கதவில் நீதிமன்ற அழைப்பாணையை கூடங்குளம் காவல்துறையினர் ஒட்டி சென்றுள்ளனர். இப்போதும் நீதிமன்ற அழைப்பாணையை நிராகரித்து செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். நீதிமன்றம் செல்லாததற்கு என் மீது பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டால் அதையும் சந்திப்பது என முடிவு செய்துள்ளேன்.
கூடங்குளம் காவல்துறையின் நீதிமன்ற அழைப்பாணையை ஏன் நிராகரிக்கின்றேன்? கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தை தமிழக மக்கள் தற்போது எதிர்க்க கூடாது, எங்களைப் போன்றோர் அப்போரட்டங்களுக்கு முன் நிற்கக் கூடாது, எங்களை வழக்கு என்று சொல்லி வள்ளியூர் பகுதியிலேயே நிரந்தரமாக இருக்க வைக்க வேண்டும், எங்களை அலைகழிக்க வேண்டும் என்று முடிவு செய்து போராட்ட வழக்கு போட்டு 6 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் 248 வழக்கு தவிர மீதம் உள்ள 132 வழக்கையும் திரும்ப பெறும் முடிவை உள்ளூர் நீதிமன்றமே தீர்மானித்துக் கொள்ளட்டும் என 08-05-2014-இல் தீர்ப்பு கூறியது. ஆனால் கிட்டத்தட்ட இப்போது வரை 1100 நாட்கள் கழிந்த நிலையில்தான், எங்களுக்கு சம்மன் கொடுப்பது என முடிவு செய்து அதை ஜூலை -2017 -இல் நடைமுறைப் படுத்தியுள்ளனர்.
இது அரசின் அப்பட்டமான பாசிச நடவடிக்கையாகும். டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத நடவடிக்கையாகும். இந்த சட்டவிரோத நடவடிக்கையை நிராகரிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதே வழக்குகளில் சுப.உதயகுமாரன் உள்ளிட்ட இதர தலைவர்கள் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி ஆஜரானார்கள். ‘நீங்கள் ஒருவர் மட்டும் ஆஜராகாமல் இருப்பதால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது?’ என முகிலனிடம் கேட்டோம். அதற்கு அவர், “கதிராமங்கலம், நெடுவாசல் என இப்போது தன்னெழுச்சியாக மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். கூடங்குளத்திலும் 3-வது, 4-வது அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் சூழலில் அதேபோன்ற ஒரு போராட்டத்தை மக்கள் முன்னெடுப்பார்கள். இதை தெரிந்துகொண்டு போராட்டக் குழுத் தலைவர்களை முடக்கும் விதமாக இப்போது பழைய வழக்குகளில் அரசுத் தரப்பு வேகம் காட்டுகிறது. இந்தப் பிரச்னையை அரசியல்படுத்த வேண்டும்; மொத்த தமிழகத்தின் பார்வைக்கும் இது போகவேண்டும் என்பதற்காகவே எனது எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறேன். இதனால் நான் கைதானாலும் கவலையில்லை.” என்றார் முகிலன்.