ஜெயலலிதாவிடம் நாடகம் போட்டு நயவஞ்சகமாக வாழ்ந்தவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே பூசல் வெடித்திருப்பதாக தகவல் பரவியிருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
‘புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மலின் அரசியல் வாரிசு புரட்சித் தலைவி அம்மாவின் அன்புக்குரிய அ தி.மு.க.வின் கோடானக்கோடி உடன்பிறப்புகளின் மேலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி உங்கள் அன்புச் சகோதரர்களின் பாசமிகு மடல்.’ என ஆரம்பிக்கும் அந்தக் கடிதத்தில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.
‘தமிழக மக்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். அ தி.மு.க.வை தொடங்கி 45 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கழகத்தின் வாழ்வும், வளர்ச்சியும் நம் ஒவ்வொருவரது கரங்களிலும் தரப்பட்டிருக்கும் இந்த தருணம் கழக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேரம். ஏழை, எளிய மக்களையும், உழைக்கும் மக்களையும், தாய்குலத்தையும் உளமார நேசித்து அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட அரும்பாடுபட்டு ஆட்சி நடத்தினார் புரட்சித் தலைவர். அவரது மறைவுக்குப் பின் கழகத்தை வழி நடத்திட கடவுள் தந்த கொடையாக வாழ்ந்தவர் புரட்சித் தலைவி அம்மா.
சூதுமதியாளர்களின் சூழ்ச்சிகளையெல்லாம் வென்று, இந்திய அரசியல் அரங்கில் தனது ஒப்பற்ற அறிவாலும், ஓய்வறியா உழைப்பாலும் கழகத்திற்கு தனிப்பெரும் மரியாதையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் அம்மா.
ஒவ்வொரு நாளும் தனக்கு ஏற்படும் அனுபவங்கள் பலவற்றை கழக பொதுக்குழு கூட்டங்களிலும், கழக முன்னோடிகளை நேரடியாக சந்தித்து மனம்விட்டுப் பேசிய தருணங்களிலும் அம்மா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். எவ்வளவு சோதனைகளுக்கு மத்தியில் அம்மா வாழ்ந்து வந்தார். எவ்வளவு ஏமாற்றுதல்களையும், துரோகங்களையும் ஒவ்வொரு நாளும் அவர் சந்தித்து மனவேதனையுடன் வாழ்ந்து வந்தார் என்பதை அம்மா நமக்கெல்லாம் இலைமறை காயாகவும், இதயத்தின் வேதனைகளை மறைத்துக் கொண்டும் நம்மிடம் கூறினார் என்பதை எண்ணிப் பார்க்கிறோம். அந்த புனிதத் தலைவியின் தியாகத்தால் அல்லவா இன்று கழகம் இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது!
அம்மா முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட முடியாமல் வாழ்வதற்கு காரணமாயிருந்தவர்கள் இன்று கழகத்தை அழிக்கத் துடிக்கிறார்கள். அம்மாவின் கண்முன் ஒரு நாடகமும், முதுகுக்குப்பின் ஒரு நாடகமுமாக நயவஞ்சக வாழ்க்கை வாழ்ந்தவர்களை அம்மா நாளும் வணங்கிய கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்பதுதான் இன்று மக்களின் கருத்தாக உள்ளது.
அம்மா அண்ணா தி.மு.க. ஆயிரம் காலத்துப்பயிர் என்றார். கழகம் இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி நடத்தி தமிழக மக்களுக்குத் தொண்டாற்றும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். உழைப்பவரே உயர்ந்தவர் என்றும் கழகத்திற்காக உழைக்கும் ஒவ்வொருவரும் அதற்கான நற்பலனைப் பெறாமல் போகமாட்டார்கள் என்றும் பலமுறை சொல்லிலும், செயலிலும் உறுதி படுத்தியவர் அம்மா.
அம்மா மீது பல பொய் வழக்குகளைப் போட்டு அவர் மனவேதனைக்கும், உடல் நோவுக்கும் ஆளாகக் காரணமாய் இருந்த நம் அரசியல் எதிரிகளோடு கடந்த சில மாதங்களாக தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கழக அரசை கலைத்திட நினைத்தவர்களின் சதிச் செயல்களை முறியடித்திருக்கிறோம்.
கள்ளத்தனமாய் வணிக உறவுகளை வைத்திருந்தவர்கள் இப்போது அம்மா உருவாக்கிய அரசைக் கலைக்க அரசியல் உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டு நயவஞ்சக நாடகம் ஆடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நல்லவேளை இவர்களைப் பற்றி எத்தனையோ முறை கழகத்தாரையும், தமிழக மக்களையும் புரட்சித் தலைவி போதுமான அளவுக்கு எச்சரிக்கைகள் செய்திருக்கிறார். இவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன!
அம்மாவின் தலைமையில் கழக உடன்பிறப்புக்கள் கட்டுப்பாட்டுடனும், கடமை தவறாமலும் பணியாற்றியது போல எப்பொழுதும் கழகத்திற்கு விசுவாசமாய் இருந்து பணியாற்றி எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு மகத்தான வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று கழகம் தோன்றிய இப்பொன்னான தருணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகாணும் பயிற்சியை எம்.ஜி.ஆரும், அம்மாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை வீழ்த்தவோ, எதிர்த்து நிற்கவோ தமிழ்நாட்டில் எந்த ஒரு தனி மனிதனோ, இயக்கமோ ஒருபோதும் தோன்றப்போவதில்லை. அம்மா சூளுரைத்தவாறு கழகம் ஆயிரம் காலத்துப் பயிராகத் தழைத்திட உறுதி ஏற்போம்! கழக அரசு இன்னும் பல நூற்றாண்டு தொடர உழைப்போம்!
இவ்வாறு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கடித வடிவிலான அறிக்கையை விட்டிருக்கிறார்கள். அதிமுக-வின் 45-வது ஆண்டு விழா அக்டோபர் 17-ம் தேதி கொண்டாட இருப்பதையொட்டி இந்த அறிக்கையை இவர்கள் விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.