ஸ்வீட் இல்லை, சிறப்பு மலர் கிடையாது : அதிமுக ஆண்டு விழாவை ‘சட்’டென முடித்த இபிஎஸ்-ஓபிஎஸ்

அதிமுக-வின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை 15 நிமிடங்களில் இபிஎஸ்-ஓபிஎஸ் முடித்துக் கொண்டனர். வழக்கம்போல ஸ்வீட், சிறப்பு மலர் வெளியீடு இல்லை.

By: Updated: October 17, 2017, 03:22:57 PM

அதிமுக-வின் 46-வது ஆண்டு தொடக்க விழாவை 15 நிமிடங்களில் இபிஎஸ்-ஓபிஎஸ் முடித்துக் கொண்டனர். வழக்கம்போல ஸ்வீட், சிறப்பு மலர் வெளியீடு இல்லை.

அதிமுக-வை எம்.ஜி.ஆர் தொடங்கி இன்றுடன் (அக்டோபர் 17) 45 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி அந்தக் கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க விழாவுக்கு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 10 மணி முதல் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்திற்கு வர ஆரம்பித்தனர். 10.45 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். 10.55 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சேர்ந்ததும், ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி தொடங்கியது. கட்சிக் கொடியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே ஒரு சேர கயிற்றை பிடித்து ஏற்றி வைத்தனர்.

அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். வழக்கமாக ஒவ்வொரு வருடமும் அதிமுக ஆண்டு விழாவையொட்டி, ஜெயலலிதா கட்சிக் கொடியேற்றி நிர்வாகிகளுக்கும் பத்திரிகை போட்டோகிராபர்களுக்கும் இனிப்பு வழங்குவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் இனிப்பு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் இனிப்பு வழங்காததை கட்சிப் பிரமுகர்கள் சிலரே ஆச்சர்யமாக பார்த்தனர். இது குறித்து சீனியர் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘இரட்டை இலை சின்னத்தை மீட்டபிறகே கட்சி ஆண்டு விழாவை உற்சாகமாக கொண்டாடுவோம்’ என்றார். வேறு சிலரோ, ‘ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவு பெறாததால், இனிப்பு வழங்கப்படவில்லை’ என்றார்கள்.

அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் கட்சி ஆண்டு விழாவையொட்டி சிறப்பு மலர் வெளியிடப்படுவது வழக்கம். அந்த மலரை ஜெயலலிதாவின் கைகளில் இருந்து, பெறுகிறவர் யார்? என்பதே பெரும் விவாதமாக அமையும். அப்படி பெறுகிற வாய்ப்பைப் பெறும் கட்சி நிர்வாகி, ஏதோ ஜாக்பாட் அடித்ததைப் போல மகிழ்வதைக் காண முடியும். அதாவது, ஜெயலலிதாவின் ‘குட்புக்’கில் இடம் பெற்றவர்களுக்குத்தான் இந்த சான்ஸ் கிடைக்கும்.

ஆனால் இந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடக்கவில்லை. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘வழக்கமாக நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இந்தப் பொறுப்பை ஏற்கும். இப்போது நமது எம்.ஜி.ஆர் இதழே எங்களுடன் இல்லை. அதனால் மலர் வெளியீடும் இல்லை’ என்றார்கள்.

கொடியேற்றம், மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கட்சி அலுவலகத்திற்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி, சில நிமிடங்களில் வெளியே வந்து காரில் ஏறிப் பறந்தார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கிளம்பிப் போனார். சீனியர் அமைச்சர்களில் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, கட்சி நிர்வாகிகளில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் என பலர் வந்திருந்தனர். தொண்டர்கள் கூட்டம் மிஸ்ஸிங்!

இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட சிலராவது விழாவில் பேசியிருக்கலாம். மொத்தமே 15 நிமிடங்களில் விழாவை முடித்துக் கொண்டதில் கட்சி நிர்வாகிகள் பலருக்கே அதிருப்தி!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aiadmk 46th anniversary come to close within 15 minutes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X