'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இரட்டை வேடம் போடும் தி.மு.க-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நிபந்தனைகளின் அடிப்படையில்தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன.
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை' என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும்." என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை… pic.twitter.com/wEtulrBPWP
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 28, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.