ஜெயலலிதா இருந்தபோது ஊழல் ஆட்சி என்று கூறாத கமல்ஹாசன் தற்போது ஊழல் ஆட்சி என விமர்சிப்பது ஏன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் முன்னதாக அரசின் அனைத்து துறைகளிலுமே ஊழல் உள்ளது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய அமைச்சர்கள், கமல்ஹாசன் மீது விமர்சனத்தை முன்வைத்தனர். கமல்ஹாசன் மீது வழக்கு தொடுப்போம் என்றும், வருமான வரி கட்டியது குறித்து விசாரணை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசன் ஒரு அறிக்கையை தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டார். அதில், எனது துறையில் உள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர்களுக்கு அனுப்பிவைக்கிறேன், மக்கள் நீங்கள் உங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நாட்கள் அரசு இணையதத்தில் அமைச்சர்களின் தொடர்பு விபரங்கள் காணாமல் போயின. தொடர்ந்து அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
இந்த நிலையில், சேலத்தில் கூட்டம் ஒன்றில் நேற்றிரவு பேசிய சரத்குமார், ஊரை விட்டே போகப்போகிறேன் என்று கூறிய கமல்ஹாசன் தற்போது அரசியல் பேசி வருகிறார் என்று விமர்சித்தார்.அவர் பேசும்போது, 1996-ம் ஆண்டு எங்கு சென்றீர்கள். ஜெயலலிதா இருக்கும் போது உங்களால் கருத்து சொல்ல முடியவில்லையா? ஓரு திரைபடத்தில் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறிக்கொண்டு ஊரைவிட்டே போகிறேன் என்று கூறியது நீங்கள்தானே. அவ்வாறு ஊரைவிட்டே ஓடப்போகிறேன் என்று கூறிவிட்டு தற்போது அரசியல் பேசுகிறீர்கள் என்று விமர்சித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வாரா? கமல்ஹாசன் கேள்வி