அதிமுக குழப்பத்தின் அடுத்தகட்டமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., ஆகியோருக்கு போட்டியாக டிடிவி.தினகரனும் பொதுக்குழுவை கூட்டுகிறார்.
அதிமுக குழப்பம் உச்சகட்டத்தை எட்டுகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைந்தன. இதைத் தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். அரசியலில் தன்னை நிலைநிறுத்த இதை முக்கியமான காலகட்டமாக அவர் நினைக்கிறார்.
ஆட்சியின் தயவோடு தலைமைக் கழகத்தை இ.பி.எஸ். தனது பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார். தலைமைக்கழக நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் மெஜாரிட்டியாக இ.பி.எஸ். பக்கம் திரளும் ரகசியமும் அதுதான். எனவே கட்சியை கைப்பற்ற, எடப்பாடி ஆட்சியை கவிழ்க்கவும் டிடிவி.தினகரன் தயாராகி வருகிறார். அதன் முதல் கட்டம்தான், தனது அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் கொடுக்க வைத்தது!
டிடிவி.தினகரன்
மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களும் பாண்டிச்சேரியில் உள்ள வின்ட் பிளவர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் கடிதத்தை தொடர்ந்து, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடிக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. கவர்னர் இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம்.
இதற்கிடையே சசிகலாவின் பதவியை தேர்தல் ஆணையம் பறித்தால், டிடிவி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்ததும் செல்லாததாகி விடும். இதைத்தான் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் சசிகலாவுக்கும், டிடிவி.க்கும் ஆதரவாக இதே எடப்பாடி தரப்பினர் சமர்ப்பித்த 7 லட்சம் அபிடவிட்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கின்றன. எனவே தேர்தல் ஆணையமும் அவசரப்பட்டு முடிவெடுக்க விரும்பவில்லை.
இதற்கு மத்தியில் எப்படியாவது டிடிவி.தினகரனை முடக்குவதற்காக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தரப்பினர் தயாராகி வருகிறார்கள். அதிமுக சட்டதிட்ட விதிப்படி, கட்சியின் பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இல்லாதபட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கையினர் கையெழுத்திட்டு, பொதுக்குழுவை கூட்டும்படி பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைக்கலாம்.
தற்போது பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் இருப்பதால், ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பி.எஸ்., தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளே பொதுக்குழுவை கூட்டத் தயாராகிறார்கள். அந்தப் பொதுக்குழுவில் சசிகலாவையும், டிடிவி.தினகரனையும் கட்சியை விட்டு நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதை தெரிந்துகொண்ட டிடிவி.தினகரன், துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரே பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கிவிடத் தயாராகிறார். வேலூர், மதுரை உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை மாற்றி, புதிய நிர்வாகிகளை அவர் நியமித்ததும்கூட இதற்காகவே! மேற்படி புதிய நிர்வாகிகள் மற்றும் ஏற்கனவே தனது ஆதரவாளர்களாக இயங்கும் நிர்வாகிகள் மூலமாக பொதுக்குழு உறுப்பினர்களை தனக்கு ஆதரவாக திரட்டுகிறார் டிடிவி.தினகரன்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இணைந்து பொதுக்குழுவைக் கூட்டினால், நீதிமன்றத்தை அணுகி அதற்கு தடை பெறும் திட்டத்தையும் டிடிவி.தினகரன் கைவசம் வைத்திருக்கிறார். எனவே அடுத்தடுத்த நாட்களில் அதிமுகவில் போட்டி பொதுக்குழு, பதிலுக்கு பதில் நிர்வாகிகள் நீக்கம் என காட்சிகள் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.