சட்டமன்றதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளளர்.
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன என்றபோதிலும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22-ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்திருந்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சட்ட மன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தின. ஆனால், ஆளுநர் எந்தவித பதிலும் இல்லாமல், மௌனம் சாதித்து வருகிறார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அதிமுக-வில் தான் இருக்கின்றனர் என்றும், உட்கட்சிகளில் இருக்கும் பிரச்சனையில் ஆளுநர் தலையிட முடியாது என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், திமுக அடுத்ததாக குடியரசுத் தலைவரை சந்தித்துப்பேச முடிவு செய்துள்ளது.
சட்டமன்றதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி திமுக எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்தை சந்திக்கவுள்ளளர். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோரும் உடன் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், அது தொடர்பாக நடவடிக்கை இல்லை என்பதைத் தொடர்ந்து, திமுக எம்.பி-க்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளனர்.
ஆனாலும், தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கூறியதாக தகவல் வெளியாது குறிப்பிடத்தக்கது.