அதிமுக அணிகள் இணைவதற்காக சாத்தியம் உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர் செல்வத்திற்கு எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் சிலர் ஆதரவு அளித்து பன்னீர் செல்வம் பக்கம் சென்றனர்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துவிடவே, சிறைக்குச் சென்றுவிட்டார் சசிகலா. இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவிஏற்றுக் கொண்டார். பிளவுபட்ட அதிமுக அணிகளை இணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எந்த பலனும் கிட்டவில்லை.
அதிமுக அணிகள் பிளவுபட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றன. ஒரு தரப்பினர் பிளவுபட்டுள்ள அணிகள் மீண்டும் விரைவில் இணையும் என்கிறார். மற்றொரு அணியினரோ அது சாத்தியமில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக அணிகள் இணையுமா அல்லது இணையாதா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், டிடிவி தினகரன், இன்று சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறும்போது: அதிமுக-வின் இரு அணிகளும் இணைய சாத்தியம் உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நான் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. அதுவரை காத்திருக்கவும். கட்சியை பலப்படுத்துவது குறித்து பொதுச்செயலாளரின் முடிவின் படி நான் செயல்படுவேன்.
இரு அணிகளையும் இணைப்பது குறித்து சசிகலா பல்வேறு விஷயங்களை தெரிவித்திருக்கிறார். அதனால், அதன்படி நடந்து கொண்டு இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்வோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு அளித்தோம் என்பது சசிகலாவின் உத்தரவின்படியே. அவர் சிறையில் இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து நான் அறிவித்தேன். இந்த விவகாரத்தில் யாருக்கும் யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
அமைச்சர் ஜெயக்குமார் பயத்தின் காரணமாக ஏதேதோ கூறி வருகிறார். எனினும் அவர் முன்பு இருந்தது போல எங்களுடன் இருப்பார். அந்த காலம் விரைவில் வரும்.
நடராஜன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அல்ல. அவர் என்னையும், திவாகரனையும் அழைத்து சமாதானம் செய்தார் என்பது தவறான தகவல். அதேபோல, சிறைச்சாலையில் சசிகலா யாரையும் அழைத்து சமாதனம் செய்யவில்லை.
உறவினர்கள் என்ற முறையில் நாங்கள் வந்து சந்தித்துக் கொள்கிறோம் அவ்வளவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவாகரன் வந்திருந்த நிலையில், நானும் வந்திருந்தேன். அதனால் நானும் அவரை சந்தித்தேன். மற்றபடி சமாதானம் செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. நடராஜன் வீட்டில் வைத்து கூட இப்படி நாங்கள் சந்தித்தது கிடையாது என்று கூறினார்.