திருச்சியைத் தொடர்ந்து சேலத்திலும் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு தொடர் அச்சுறுத்தலாக இருந்து வருபவர் டிடிவி தினகரன். ‘இந்த ஆட்சியை கவிழ்த்தே தீருவேன்’ என சபதம் எடுத்தது மட்டுமின்றி, அரசு மீது கடும் விமர்சனங்களையும் வைத்து வருகிறார். உதாரணத்திற்கு, இன்று அளித்த பேட்டியில் ‘டெங்குவை விட இந்த அரசு கொடுமையானது’ என குறிப்பிட்டார். டிடிவி-யின் பேட்டிக்கு மீடியா மத்தியில் உள்ள முக்கியத்துவமும் ஆட்சிக்கு நெருக்கடியை அதிகப்படுத்துகிறது.
எனவே டிடிவி தினகரனை தனிமைப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரி, பெங்களூரு என இடம் மாற்றி எடப்பாடிக்கு நெருக்கடியை அதிகமாக்கினார் டிடிவி. இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் மூலமாக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் மூலமாக சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை தக்கவைக்க எடப்பாடி அரசு தயாரானது.
ஆனால் அந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் ரீதியாக தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் இந்த விஷயத்தில் டிடிவி அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. நீட் தேர்வை கண்டித்து உயிரை மாய்த்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு அரசு கொடுத்த உதவித் தொகையை மாணவியின் குடும்பத்தினர் பெற மறுத்தனர்.
ஆனால் டிடிவி தினகரன் ஒருமுறை நேரடியாக சென்று அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இரண்டாவது முறையாக திருமாவளவனுடன் இணைந்து சென்று, மாணவியின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். முதல்வரோ, அமைச்சர்களோ அனிதா குடும்பத்தினரை சந்திக்க முடியாதது குறித்து ஊருக்கு ஊர் சென்று கேலியும் கிண்டலுமாக பேசியும் வருகிறார் டிடிவி.
இதனால் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினைவிட முதல்வர் தரப்பின் டென்ஷனை அதிகரிக்கும் நபராக டிடிவி இருந்துகொண்டிருக்கிறார். திமுக.வினரே கூட இந்த ஆட்சியை கவிழ்க்க நம்பிக்கொண்டிருப்பது டிடிவி தினகரனைத்தான்.
இப்படி பல முனைகளிலும் டார்ச்சர் கொடுக்கும் தினகரனை டார்கெட் செய்யும் விதமாக அரசு தரப்பும் அத்தனை ஆயுதங்களையும் கையில் எடுக்கத் தயாராகிவிட்டது. டிடிவி அணியின் முன்னணி பிரமுகர்களான செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோரை வழக்குகளை காரணம் காட்டி போலீஸ் துரத்தியது. அவர்கள் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு, வழக்குகளை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டனர்.
இறுதிகட்டமாக இப்போது டிடிவி தினகரனை நோக்கியும் வழக்குகள் பாய்கின்றன. ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவாகி திகாருக்கு சென்றுவிட்டு வந்தபிறகே, மத்திய அரசுக்கு எதிராக பாய்வதை முற்றிலுமாக தவிர்த்தார் டிடிவி தினகரன். எனவே அதே ஆயுதத்தை மாநில அரசு தரப்பிலும் பயன்படுத்துகிறார்கள்.
அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்த நடிகர் செந்தில், திருச்சி எம்.பி. குமார் குறித்து சில கருத்துகளை கூறினார். அது டிடிவி தினகரன் தூண்டுதல் அடிப்படையில் நடந்ததாக ஏற்கனவே டிடிவி தினகரன் மீது திருச்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சேலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.கே.செல்வம், மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிலர் நீட் தேர்வை எதிர்த்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக தெரிகிறது. அது தொடர்பாக அரசுக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக டிடிவி தினகரன் உள்ளிட்ட 36 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் இது தொடர்பாக டிடிவி அணி பிரமுகர்கள் 11 பேரை கைது செய்திருப்பதாக தெரிகிறது. மேலும் சிலரை விசாரித்து வருகிறார்கள். டிடிவி தினகரனை இந்த வழக்கில் கைது செய்து அதிர்ச்சியூட்ட அரசு தரப்பு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.