அதிமுக பொதுக்குழுவுக்கு காலையிலேயே வந்து சேர்ந்த உறுப்பினர்களுக்கு ‘டிஃபன்’ வழங்கப்படவில்லை. ‘அம்மா இருந்தவரை இப்படி பட்டினி போடலையே?’ என பொதுக்குழு உறுப்பினர்கள் குமுறினர்.
அதிமுக பொதுக்குழு பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்னையை அடுத்த வானகரத்தில் இன்று (செப். 12) கூடியது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன் தினமே ஏ.சி. பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலமாக அவர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர், ‘கால் டாக்ஸி’யை ‘புக்’ செய்துகொண்டு நேரடியாகவே மண்டபத்திற்கு வந்தனர். அதேபோல தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும், ‘லேட்டாப் போனா, உள்ளே நுழைய முடியாத அளவு கெடுபிடி இருக்கும்’ என பயந்துபோய் காலை 8 மணிக்கே வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு வந்துவிட்டனர்.
ஜெயலலிதா இருந்தபோதும், இதே மண்டபத்தில்தான் பொதுக்குழு நடந்தது. சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததும்கூட, இதே மண்டபத்தில் நடந்த பொதுக்குழுதான். இங்கு பொதுக்குழு கூடுகிற ஒவ்வொரு முறையும் காலை டிஃபன் தயார் செய்து உறுப்பினர்களுக்கு வழங்குவது வழக்கம். அதேபோல மத்தியானம் பொதுக்குழு முடிந்தது சைவ, அசைவ அயிட்டங்கள் தனித்தனியாக பறிமாறப்படும்.
இந்த எதிர்பார்ப்புகளுடன்தான் இன்றும் காலையிலேயே பொதுக்குழு மண்டபத்திற்கு உறுப்பினர்கள் வந்தனர். மண்டப வளாகத்திற்குள் நுழைந்த அவர்களுக்கு முதல் அதிர்ச்சி, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக மண்டப வளாகத்தில் வழக்கமாக போடப்படும் இரண்டு பந்தல்கள் மிஸ்ஸிங்! அந்த இடம் முழுவதும், வெளியூர்களில் இருந்து உறுப்பினர்கள் வந்த ஏ.சி. பஸ்களை நிறுத்துவதற்கான ‘பார்க்கிங்’ ஏரியாவாக மாற்றப்பட்டிருந்தது.
காலை டிஃபன் எதுவும் ஏற்பாடு செய்யப்படாததால், முன்கூட்டியே அங்கு வந்த உறுப்பினர்கள் சாலையோரக் கடைகளில் அலை மோதினர். அதேபோல மத்தியான உணவாகவும் சைவ சாப்பாடு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘அம்மா இருந்தவரை, தலைவர் (எம்.ஜி.ஆர்) பாணியில் சாப்பாட்டுக்கு குறையே வைக்கலை. இப்போ ஆளும்கட்சியா இருந்தும், இதில் யாரும் கவனம் செலுத்தலையே!’ என பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் குமுறலாக பேசினர்.
இது குறித்து மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டபோது, ‘பொதுக்குழு நடக்குமா, நடக்காதா? என்கிற குழப்பம் கடைசி வரை நீடித்தது. அதனால் இதில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும் அமைச்சர்களுக்கு அவரவர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களை குறைவில்லாமல் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எனவே குமுறலுக்கு வாய்ப்பில்லை’ என்றார்கள்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் முகங்களில் கட்சியின் இக்கட்டான சூழலும், ஜெயலலிதா மறைவு உருவாக்கிய சோகமும் இன்னமும் பிரதிபலித்தன.