அதிமுக பொதுக்குழுவுக்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதனால் பொதுக்குழு சஸ்பென்ஸ் தொடர்கிறது.
அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 12-ம் தேதி (செவ்வாய்) காலை 10.35 மணிக்கு இந்த பொதுக்குழு கூடுகிறது.
இந்தப் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை செப்டம்பர் 11-ம் தேதி (இன்று) காலையில் விசாரித்த தனி நீதிபதி கார்த்திகேயன், ‘வழக்கை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரர் வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம்’ விதித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வெற்றிவேல் தரப்பில் முறையிட்டனர். நீதிபதிகள் ராஜீவ் சத்தார், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் இந்த மனு பட்டியல் இடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை இரவு 7.15 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையே பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளானது.
இரவு 9.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தனது உத்தரவை இந்த வழக்கில் பிறப்பித்தது. அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. ஆனால் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பெங்களூரு நீதிமன்ற உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கப்பட வில்லை.
பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும், சென்னை நீதிமன்றம் தடை விதிக்காத நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட இயலுமா? அதில் எடுக்கும் முடிவுகள் செல்லுமா? என்கிற சட்ட விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், ‘திட்டமிட்டபடி செவ்வாய்கிழமை காலையில் பொதுக்குழு நடைபெறும்’ என தெரிவித்தனர்.
இதுநாள் வரை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்த அதிமுக உள்கட்சி விவகாரம், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறியிருப்பது குறிப்பிடத்தக்கது.