அதிமுக பொதுக்குழுவின் ஹைலைட்டே ஆட்சிக்கு ஒரே தலைமை, கட்சிக்கு கூட்டுத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டிருப்பதுதான்! இந்தப் பொதுக்குழு டிடிவி.தினகரனுக்கு மட்டுமல்ல, ஓ.பி.எஸ்.ஸுக்கும் பின்னடைவு!
அதிமுக பொதுக்குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் இடையிலான பலப்பரீட்சையாகவே பொதுத்தளத்தில் பார்க்கப்பட்டது. மெஜாரிட்டி நிர்வாகிகளை இதில் கலந்துகொள்ள வைத்ததன் மூலமாக, இந்தப் பலப்பரீட்சையில் எடப்பாடி பழனிசாமி ஜெயித்துவிட்டார்.
ஆனால் ஓசையில்லாமல் அவர் ஈட்டிய இன்னொரு வெற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் அரசியல் ரீதியாக பின்னுக்கு தள்ளியிருப்பதுதான்! இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்டத்தில், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கட்சியும் ஆட்சியும் எப்படி இருந்ததோ, அப்படி இருக்கவேண்டும் என முதலில் பேசப்பட்டது. அதாவது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்!
பிறகு ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தி, பொதுச்செயலாளர் பதவியை சுலபமாக கைப்பற்றிவிடலாம் என்பதுதான் ஓபிஎஸ் போட்ட திட்டம்! ஆனால் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை தக்க வைப்பதில் வித்தகரான இபிஎஸ், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் சிந்தனைக்கே இடமில்லை என விடாப்பிடியாக இருந்தார்,
அதன்பிறகுதான், ‘ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு ஓபிஎஸ்’ என பேச்சு எழுந்தது. இதற்கு இபிஎஸ் தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிமிடம் வரை பொதுச்செயலாளர் பதவியை ஓ.பி.எஸ் தரப்பு எதிர்பார்த்தே இருந்தது. ஆனால் இபிஎஸ் தரப்பில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனைகளில், ‘இனி கட்சியில் யாருக்கும் தனி அதிகாரம் தேவையில்லை. கூட்டுத் தலைமையாக இருப்போம்’ என முடிவு செய்தனர்.
காரணம், கட்சியில் ஜெயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மெஜாரிட்டி நிர்வாகிகள் இக்கட்டான தருணத்தில் ஓ.பி.எஸ்.ஸை பகைத்திருந்தனர். அதை மனதில் வைத்து ஓபிஎஸ் பழிவாங்கிவிடக்கூடும் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. எனவேதான் இரு அணிகளின் இணைப்புக்கு முன் தினம் அதிமுக தலைமை அலுவலத்தில் கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில், ‘ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியில் வேறு யாரையும் அமர்த்த தொண்டர்கள் விரும்பவில்லை’ என தீர்மானம் நிறைவேற்றினர்.
அப்போதைக்கு சசிகலாவுக்கு எதிரான தீர்மானமாக அது தோற்றம் தந்தாலும், மறைமுகமாக ஓபிஎஸ்.ஸுக்கு வைக்கப்பட்ட செக் அது! அதே தீர்மானம்தான் செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழுவில் அச்சுப் பிசகாமல் 7-வது தீர்மானமாக இடம்பெற்றது, ‘அம்மா வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பில் இன்னொருவர் இருந்து செயல்படுவது இயலாது என்பதால், பொதுச்செயலாளர் பொறுப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்கிறது அந்தத் தீர்மானம்.
11-வது தீர்மானம், அதிமுக.வின் நிர்வாக பொறுப்புகளை ஏற்றிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் நிர்வாக அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. இனி கட்சியில் எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் இவர்கள் இணைந்தே எடுப்பார்கள். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என கட்சி சார்பில் எந்த ஆவணம் வழங்குவதாக இருந்தாலும், இவர்கள் இருவரும் கையெழுத்திட்டே அனுப்புவார்கள்.
அதாவது, பொதுச்செயலாளர் பதவிக்கு இருந்த அனைத்து அதிகாரங்களையும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்.ஸும் இணைந்து மேற்கொள்வார்கள் என்பதே அதன் சுருக்கம். இதன் மூலமாக அதிமுக.வில் சர்வ அதிகாரம் பொருந்திய பொதுச்செயலாளர் பதவிக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது. 1972-ல் கட்சி தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தனி மனித ஆதிக்கத்தில் சுழன்ற அதிமுக, முதல் முறையாக கூட்டுத் தலைமைக்கு வந்திருக்கிறது.
பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த ஓபிஎஸ்.ஸுக்கு இது பெரும் பின்னடைவு. கட்சி கட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸுக்கு அடுத்த இடத்தில்தான் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ்.ஸுக்கு என எந்த ஒரு சிறு தனிப்பட்ட அதிகாரமும் வழங்கப்படாததுதான் இபிஎஸ்.ஸின் வெற்றி!
ஒரு வார்டு தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாகட்டும், ஒரு கிளை செயலாளரை பதவி நீக்கம் செய்வதாகட்டும், இபிஎஸ் கையெழுத்து இல்லாமல் ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க முடியாது. கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பும்கூட அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனனுக்கு போய்விடுகிறது. இதேபோல ஆட்சியில் துணை முதல்வர் என்கிற பதவியில் ஓபிஎஸ் அமர வைக்கப்பட்டாலும், அந்தப் பதவிக்கென்று அரசியல் சட்ட உரிமைகள் எதுவும் கிடையாது.
ஆட்சியில் முதல்வர் எடப்பாடி தனித் தலைமையாகவே இயங்க முடியும். இப்போதும் அரசு சார்பில் மாவட்டம் தோறும் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் இபிஎஸ்.ஸுக்குத்தான் முழு மரியாதை. இந்த விழாக்களுக்காக நாளிதழ்களில் வெளியாகும் முழுப்பக்க விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் படங்களுடன் இபிஎஸ் படம் மட்டுமே இடம் பெறுகிறது.
டிடிவி.தினகரன் போர்க்கொடியை தொடர்ந்து மாவட்டம் வாரியாக எம்.எல்.ஏ.க்களை தனது இல்லத்தில் சந்தித்த இபிஎஸ், அப்போதும்கூட ஓபிஎஸ்.ஸை அருகில் வைத்துக்கொள்ளவில்லை. நிதி இலாகா, வீட்டு வசதித்துறை ஆகிய துறைகளை வைத்திருக்கும் ஓபிஎஸ்.ஸால் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதைத் தவிர, வேறு பெரிதாக எந்த அதிகார தாக்கத்தையும் ஆட்சியில் உருவாக்க முடியாது.
அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ்.ஸைவிட அதிக செல்வாக்கு இருப்பவராக கருதப்பட்ட ஓபிஎஸ்., வசமாக இணைப்பு வலையில் இபிஎஸ்.ஸுக்கு கீழே சிக்கிக் கொண்டார் என்பதே பொதுக்குழு சொல்லும் செய்தி. ஓபிஎஸ் ஆதரவாளர்களான சீனியர்கள் பலருமே இதை உணர்ந்திருக்கிறார்கள். ஓபிஎஸ்.ஸும் இதை உணர்வதால்தான் இன்னும் முழுமையாக இணைப்பில் கரையாமல் அவ்வப்போது தனது இல்லத்தில் பழைய மாதிரியே ஆதரவு சீனியர்களுடன் ஆலோசனை நடத்தியபடி இருக்கிறார்.
ஆட்சியில் அதிகம் ஒட்டாத ஓபிஎஸ், ஒண்டிவீரன் விழா, பூலித்தேவன் பிறந்த விழா என மாநிலம் முழுவதும் சுற்றிவந்து களத்தை வலுப்படுத்தி வைப்பதும் ஏதோவொரு திட்டத்தில்தான். ஆரம்பத்தில் சசிகலா எதிர்ப்புதான் ஓபிஎஸ்.ஸின் ஒரே மந்திரமாக இருந்தது. அதையும்கூட இப்போது இபிஎஸ் தரப்பு கையிலெடுத்து டிடிவி.தினகரனை விரட்டியடிப்பதால், அதிலும் ஓபிஎஸ்.ஸுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
டிடிவி.தினகரன் அத்தியாயம் ஒரு முடிவுக்கு வந்தா, இபிஎஸ்-ஓபிஎஸ் இடையிலான அத்தியாயங்களின் முழு பரிணாமங்களும் வெளியே வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.