/tamil-ie/media/media_files/uploads/2017/09/jeyalalitha.jpg)
அதிமுக பொதுக்குழுவில், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பேசாதது தொண்டர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
அதிமுக பொதுக்குழுவின் முடிவுகள் தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தன. செப்டம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 3 தீர்மானங்கள் தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் பாராட்டுவதாக இருந்தன.
குறிப்பாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டம் வாரியாக தமிழக அரசு கொண்டாடுவதை பாராட்டி 3-வது தீர்மானமும், மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்க 15 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டி 4-வது தீர்மானமும், புயல், வறட்சி நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த தமிழக அரசை பாராட்டி 5-வது தீர்மானமும் இருந்தன.
ஆனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறித்து இந்தப் பொதுக்குழுவில் யாரும் மூச்சே விடவில்லை. தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
இந்த வாக்குறுதிகளை நம்பியே ஓ.பன்னீர்செல்வம் தனது ‘தர்மயுத்தத்’தை நிறைவு செய்துவிட்டு, அணிகள் இணைப்புக்கு சம்மதம் கூறினார். ஆகஸ்ட் 21-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைப்புப் படலமும் நடந்து முடிந்தது. அதன்பிறகு அரசு ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ அந்த இரு அறிவிப்புகள் குறித்து யாரும் பேசுவதில்லை. அவற்றை செயல்படுத்தும் திட்டங்களில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
பொதுவாக எந்த ஒரு பிரச்னையிலும் நீதி விசாரணை நடத்துவதில், ஆட்சியாளர்களுக்கு பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. வழக்கமாக நீதி விசாரணை அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் பெயரையும், அவரது விசாரணை வரம்புகளையும் அரசு அறிவித்துவிடும். பிறகு அந்த ஆணையம் விசாரணை அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்குமா? அப்படியே சமர்ப்பித்தாலும் அரசு அதை அமுல்படுத்துமா? என்பவை அடுத்த பிரச்னைகள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நீதி விசாரணைக்கு, நீதிபதியின் பெயரே அறிவிக்கப்படாமல் இருப்பதுதான் விவகாரமே! அதேபோல, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, அங்கிருந்த தனியார் செக்யூரிட்டிகள் விரட்டப்பட்டனர். அதன்பிறகு அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதையும் அரசு தெரிவிக்கவில்லை.
எனவே இந்த இரு அறிவிப்புகளையும் பெயரளவுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டாரா? என்பதே இப்போதைய கேள்வி. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவது, ஜெயலலிதா நினைவிடத்தை சீரமைப்பது ஆகியவற்றுக்காக அரசைப் பாராட்டிய பொதுக்குழு, ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை குறித்து தீர்மானம் நிறைவேற்றாதது அந்த சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. காரணம், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை அமைப்பது அதிமுக.வைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு பிரச்னை!
இதேபோல போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக்குவதும் அதிமுக தொண்டர்களுக்கு உணர்வுபூர்வமான பிரச்னை. அதிமுக பொதுக்குழுவில் இதை ஒரு தகவலாககூட பொதுக்குழுவில் கூறாதது ஆச்சர்யம். இந்த இரு அறிவிப்புகளையும் செயல்படுத்தும் நடைமுறை எந்த அளவில் இருக்கிறது? என்பதையாவது பொதுக்குழுவில் தெரிவித்திருக்கலாம். இந்த இரு அறிவிப்புகளை நம்பி ‘தர்மயுத்தத்தை’ நிறைவு செய்த ஓ.பன்னீர்செல்வமும் இது குறித்து கேள்வி எழுப்பாதது உச்சபட்ச ஷாக்!
அதிமுக தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் இதை எப்போது தெளிவுபடுத்தப் போகிறார்கள்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.