யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களான தனியரசு, தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
டிடிவி தினகரன் அணியில் 19 எம்.எல்.ஏ-க்கள் உள்ள நிலையில், அவர்கள் ஒன்றிணைந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் என பிளவுபட்டிருந்த அதிமுக அணிகள் ஒன்றிணைந்த பின்னர் டிடிவி தினகரன் அணியினர் ஆளுநர் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். அதில், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இந்த ஆட்சி உருவாக காரணமாக இருந்தவர் சசிகலா தான் என்றும், அவரையே தற்போது நீக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளனர் என டிடிவி தரப்பு குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக, துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானம் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரா நிலைப்பாட்டை, டிடிவி தினகரன் அணியினர் வலுப்படுத்தியுள்ளனர். ஆளுநரை சந்தித்துள்ள அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என கடிதம் அளித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ் உள்ளிட்டோரின் ஆதரவு யாருக்கு என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இது தொடர்பாக, தனியரசு, தமீமுன் அன்சாரி, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகளை தமிழக கொங்கு இளைஞர் பேரவை ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சி நிர்வாகத்தில் வரம்பு மீறி தலையிடுவதாகவும், இதனாலேயே இந்தகைய குழப்பம் ஏற்படுவதாக உணர்கிறோம்.
தமிழ் நாட்டின் நலன் கருதியே எங்களது அரசியல் இருக்கிறது. நடைபெற்று வரும் தமிழக அரசியல் சூல்நிலைகளை கவனித்து, எங்கள் கட்சி தொண்டரகளின் கருத்துகளையும் உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும், எனவே எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் ஆணையிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவும் முக்கியம் என்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.