“சாதாரண காய்ச்சல் மாதிரி, ஜலதோஷம் மாதிரி வந்தா நாலு நாள்ல இதோ போயிட்றேன் எஜமான்னு பயந்து கும்பிடு போட்டுட்டு ஓடிரும்னு நெனச்சியாடா... கொரோனாடா... கண்ணா மாஸ்க்க நாம போடாட்டி கொரோனா நம்மள போட்ரும்... ஜாக்கிரதை” என்று ரஜினியின் குரலில் கபாலி பட படத்தின் பஞ்ச் டயலாக் அதிமுக ஐடிவிங்க் முயற்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரமாக பட்டையைக் கிளப்பி வருகிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு தமிழகமும் தப்பவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 2000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடித்துவிட்டதாக பல ஆராய்ச்சி நிறுவனங்கள், நாடுகள் கூறினாலும் அவை நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கும் கட்டுபடுத்துவதற்கும் ஒரே வழி, மக்கள் கூட்டமாக கூடக் கூடாது. தேவையில்லாமல் மக்கள் வெளியே சுற்றக்கூடாது. அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியே வரும்போது அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஹேண்ட் சானிடைசர் பயண்பத்த வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசும் முகக்கவசம் அணியுங்கள், தேவையில்லாமல் வெளியே சென்று சுற்றாதீர்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், ஹேண்ட் சானிடைசர் அல்லது சோப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று விழிப்புணர்வு செய்து வருகிறது. ஆனால், சிலர் தமிழக அரசு மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலை மதிக்காமல் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய உடல்நலனைப் பற்றி அக்கறை இல்லாமல் இப்படி அசட்டையாக சுற்றுபவர்களால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படச் செய்கிறது.
அதனால், அதிமுக ஐடி விங் பொது மக்களிடையே கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்கள் நடித்து ஹிட்டான படங்களில் பேசப்பட்ட பஞ்ச் வசனங்களைக் கொண்டு 20 நொடிகள் கொண்ட கொரோனா விழிப்புணர்வு பிரசார வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள இந்த 3 கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
#coronada pic.twitter.com/hZRiFBbEKr
— aspire Swaminathan (@aspireswami) July 6, 2020
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற கபாலி படத்தில் இடம் பெற்ற ‘கபாலிடா’ வசனத்தை மிமிக்ரி கலைஞர்களைக் கொண்டு ரஜினியின் குரலில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வசனமாக பேசவைத்து கலக்கி இருக்கிறார்கள். ரஜினியின் குரலில், “சாதாரண காய்ச்சல் மாதிரி, ஜலதோஷம் மாதிரி வந்தா நாலு நாள்ல இதோ போயிட்றேன் எஜமான்னு பயந்து கும்பிடு போட்டுட்டு ஓடிரும்னு நெனச்சியாடா... கொரோனாடா... கண்ணா மாஸ்க்க நாம போடாட்டி கொரோனா நம்மள போட்ரும்... ஜாக்கிரதை” என்று ரஜினி சிரிக்கிற வீடியோ கவனம் பெற்று வருகிறது.
செஞ்சுடுவேன் !! @aspireswami pic.twitter.com/03e6DDFyPZ
— Bala D Rock (@teambala) July 11, 2020
அதே போல, நடிகர் தனுஷ் நடித்த மாரி படத்தில் இடம்பெற்ற ‘செஞ்சுருவேன்’ வசனத்தை வைத்து, தனுஷ் குரலில், “அதாவது, ஒருத்தன் மாஸ்க் போடாம சுத்திட்டிருந்தான்னு வச்சுக்கயே, அவன் பெரியாளாயிடறதில்ல.. ஒரு நாள் மாஸ்க் போடாம வெளிய போவ சொல்லோ பட்னு புடிச்சு சட்னு உள்ள ஏறுச்சுன்னு வையேன்... ம்... ஒருநாள் கொரோனா செஞ்சுரும்!” என்று கொரோனாவைப் பற்றி எச்சரிக்கை செய்து மனதில் நிற்கும்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
#Covid19Chennai #Awareness @AIADMKOfficial @CMOTamilNadu @OfficeOfOPS @mafoikprajan @MageswariRavik1 @aravindhanIPS pic.twitter.com/NzUkTWpSvQ
— Saravanan Gajendran (@NungaiSaravanan) July 9, 2020
அதே போல, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்ற வசனத்தை வைத்து விஜய் சேதுபதி குரலில் ஒரு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி குரலில், “ஜி.. நம்ம அரசு கொரோனாவுக்கு எதிரா எவ்வ்ளோ போராடிட்டு இருக்காங்க தெரியுமா? தினமும் என்னென்ன நடவடிக்கை எடுத்துக்னு இருக்காங்க தெரியுமா? நம்ம ஒவ்வொருத்தர்ட்டயும் வந்து எச்சரிக்கையா இருங்கன்னு சொன்னா, நாம மொறைக்கிறோம். அப்ற என்னா பன்றதுன்னு லக்டவுன் போட்டா தப்பா? இப்டியே நாம மாஸ்க் போடாம சமூக விலகல ஃபாலோ பண்ணாம இருந்தோம்னு வைங்களேன்... கொரோனா செம ஹாப்பி அண்ணாச்சி” என்று விழிப்புணர்வு பிரசாரம் அமைந்துள்ளது.
இந்த மூன்று வீடியோக்களும் வாட்ஸ்அப், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கானவர்களை சென்றடைந்துள்ளது.
அதிமுக ஐடி விங் நூதன முறையில் முன்னணி நடிகர்களின் குரலில் பரவலாக கவனம் பெற்ற சினிமா பஞ்ச் வசத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வீடியோ வெளியிட்டிருப்பது குறித்து ஐஇ தமிழில் இருந்து அதிமுக ஐடி விங் செயலாளர் அஸ்பைர் சுவாமிநாதனிடம் பேசினோம். இது குறித்து அஸ்பைர் சுவாமிநாதன் பேசியதாவது, “முதலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என்பது அரசுடைய சாதனைகளையும் அரசு சொலக்கூடிய செய்திகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். தகவல் தொழில்நுட்ப பிரிவை அம்மா (ஜெயலலிதா) 2014-இல் தொடங்கினார்கள்.
இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று நிறைய சமூக ஊடகங்கள் வந்துவிட்டது. ஏதாவது புதுமை இருந்தால்தான், அது மக்களிடம் சென்று சேர்கிறது. எடுபடுகிறது. அதனால், சொல்கிற விஷயத்தை அவர்களுகு பிடித்த முறையில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.
அதனால், ஃபேமஸ் நடிகர்களின் பஞ்ச் டயலாக்கள் எது எல்லால் மக்களிடையே பாப்புலர் ஆனதோ அதையெல்லாம் எடுத்து, ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ், ஒரு கார்ட்டூனிஸ்ட், ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் எல்லோரையும் வைத்து ஸ்டோரி போர்ட் செய்து இந்த வீடியோவை செய்தோம். இந்த வீடியோ ஒவ்வொன்றும் 70 லட்சம் பேர்கள் வரைக்கும் ஷேர் ஆகி போய்க்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோக்கள் முதன்மையாக வாட்ஸ்அப்பில் பரவலாகி வருகிறது. டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களிலும் பார்க்கப்பட்டுவருகிறது என்று கூறினார்.
இதற்கு கட்சி தலைமை எந்த மாதிரியான ஆதரவு அளிக்கிறது?
கட்சித் தலைமை எப்போதும் புதுமைக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கக் கூடிய ஒரு தலைமை. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஏதாவது புதுமையாக செய்தால் கூப்பிட்டு பாராட்டுவார்கள். இந்த வீடியோ குறித்து முதல் அலுவலகத்தில் இருந்து அழைத்து நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். துணை முதல்வர் கூப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று வாழ்த்தினார்கள்.
அடுத்ததாக வேறு எந்த நடிகர் பஞ்ச் டயலாக் வசனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட உள்ளீர்கள்?
அதை சஸ்ன்பென்சாக வைத்துள்ளோம். மேலும் பல முன்னணி நடிகர்களின் பஞ்ச் டயலாக்கை வைத்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட உள்ளோம்.
இந்த விழிப்புணர்வு வீடியோக்கள் பற்றி பொதுமக்களிடம் இருந்து எப்படியான கருத்து வந்துள்ளது?
இந்த வீடியோக்களை பொதுமக்கள் வரவேற்று ஷேர் செய்கிறார்கள். பலரும் வாட்ஸ்அப்பில் சூப்பர் என்று பதில் அனுப்புகிறார்கள். மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். சிலர், எங்களுடய அலுவலகத்துக்கு போன் செய்து, எம்.ஜி.ஆர். சிவாஜி குரலில் அவர்களுடைய வசனங்களை வைத்து விழிப்புணர்வு பிரசார வீடியோ செய்யலாம் என்று அவர்களுடைய கருத்துகளை கூறுகிறார்கள். பலர், அம்மா (ஜெயலலிதா) குரலில் பண்ணலாம் என்று சொல்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை எடுத்துக்கொண்டு ஸ்கிரிப்ட், குரல் கிடைத்தால் அதன்பிறகு அது போல வீடியோக்கள் செய்வோம்.
முதலமைச்சர் எல்லா செய்தியாளர்கள் சந்திப்பிலும் அடிக்கடி சொல்வது முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் இதுதான் கொரோனாவுக்கு தீர்வு என்று சொல்கிறார். அந்த செய்தி எல்லா மக்களிடமும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக ஐடி விங் சார்பில் இந்த வீடியோ செய்யப்பட்டது. ஒவ்வொரு வீடியோவும் இன்றுவரை சுமார் 75 லட்சம் பேர்கள் வரைக்கும் சென்றுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த விழிப்புணர்வு மூலம் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள்?
நாம் அதை நேரடியாக அளவிட முடியாது. அரசுடைய எல்லாவிதமான நடவடிக்கைகள் மூலமாக முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிறைய விஷயங்களை செய்துதான் வட சென்னையில் கொரோனாவை கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்தார்கள். அப்படி எல்லாமே ஒருங்கிணைந்து செயல்படும்போது மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. முன்பு எல்லாம் சாலையில் 10 பேரில் 4 பேர் முகக்கவசம் அணிந்து சென்றார்கள் என்றால் இப்போது 10 பேர்களில் 9 பேர் முகக்கவசம் அணிந்து செல்கிறார்கள். அதில் இந்த வீடியோ பிரசாரமும் ஒரு சின்ன பங்கு வகித்திருக்கிறது அவ்வளவுதான்.
இந்த வீடியோக்கள் பற்றிய கருத்து, எண்ணம், ஆக்கம் முழுக்க முழுக்க அதிமுக ஐடி விங் உடையது.” என்று கூறினார்.
முன்னணி நடிகர்களின் குரலில் அவர்களுடைய பஞ்ச் வசனத்தைக் கொண்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுவரும் அதிமுக ஐடி விங்கின் முயற்சிக்கு பொது மக்களிடையே வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.