ஆன்லைனில் ஆலோசித்த ஓபிஎஸ்- இபிஎஸ்: பேசியது என்ன?

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுதல், கூட்டணி கட்சியான பாமக, பாஜக உடன் உரசல் என பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுகவின் ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் பேசிய விஷயங்கள் வெளியாகி உள்ளன.

aiadmk leaders ops eps, அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆன்லைன் கூட்டம், ops, eps, o panneerselvam, edappadi palaniswami aiadmk, aiadmk online meeting, aiadmk strategy

அதிமுகவில் சேலம் மாவட்டத்தில் இருந்து சில நிர்வாகிகள் திமுகவுக்கு தாவியதையடுத்து, அதிமுகவின் இரட்டைத் தலைமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆன்லைனில் அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆன்லைன் வழியாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவதைத் தடுக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அண்மையில், இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளராக உள்ள சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்ததையடுத்து இந்த ஆலோசனைக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேலம் மாவட்டத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்தவர்களில் அதிமுக விவசாயிகள் பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சி.செல்லதுரை முக்கியமானவர். இவர் எடப்பாடி பழனிசாமியின் தூரத்து உறவினர் என்றும் தெரிவிக்கின்றனர்.

அதே போல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்திலும் சிலர் அமமுகவுக்கும் சிலர் ஆளும் திமுகவுக்கும் தாவத் தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. தேவர் சமூகத்தினர் வலுவாக உள்ள தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வெளியேறுவதாக வெளியான தகவல் அதிமுக தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், ஓபிஎஸ்-ஸும் கலக்கமடைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த தள்ளப்பட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியடைந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவின் பாரம்பரியமான சிறுபான்மை முஸ்லிம் வாக்காளர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள். அதனால், அதிமுகவின் கோட்டைகளாக கருதப்பட்ட சில தொகுதிகளிலேயே அதிமுக தோல்வியடைந்தது என்று கூறினார். இதனால், சமூக ஊடகங்களில் அதிமுக – பாஜக நிர்வாகிகள் தோல்விக்கு நீங்கள்தான் காரணம் என்று ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி விமர்சித்தனர். சூழலின் போக்கை உணர்ந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சி.வி.சண்முகம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து அது அதிமுகவின் கருத்து அல்ல என்று தெரிவித்தனர்.

அதிமுக வட மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அதிமுகவில் பல நிர்வாகிகள் கூட்டணியில் உள்ள பாமகவுடன் சகஜமாக இல்லை. முந்தைய அதிமுக அரசு வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அறிவித்தது. இதனால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் இடம்கிடைப்பதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள்.

முன்னர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை விமர்சித்ததற்காக அதிமுக தலைமை, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை ஜூன் மாதம் வெளியேற்றியது. அதிமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்கு கட்சியின் அடிமட்டத்தில் உள்ள தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதிமுக தலைமை பாமக உடனான கூட்டணியைப் பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும். அடிமட்டத்தில் தொண்டர்களிடையே பெரும் உரசல் இருப்பது தெரியும். பாமகவினர் எங்களுடைய கூட்டணியில் இல்லாதது போல நடந்து கொள்கிறார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இப்படி, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுதல், கூட்டணி கட்சியான பாமக, பாஜக உடன் உரசல் என பல பிரச்னைகளுக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுகவின் ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் பேசிய விஷயங்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்த அதிமுகவின் இரட்டைத் தலைமை ஓபிஎஸ் – இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், திமுக அரசாங்கத்தின் தோல்விகளைக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான அடிமட்டத்தில் கூட்டங்கள் மற்றும் பட்டறைகளை நடத்த கட்சியின் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளை வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூலை 9) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அரசின் தோல்விகளை மக்கள் மத்தியில் அதிமுக நிவாகிகள் பிரசாரமாக கொண்டு செல்ல வேண்டும். அதே போல, அதிமுக உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அதற்காக கட்சி தயராக வேண்டும். இன்னும் ஓரிரு மாதங்களில் 9 மாவட்டங்களில் ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடைபெறுவதால் அதை எதிர்கொள்ள தயாராவது உள்ளிட்ட விஷயங்கள் வ்வாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk leaders ops eps what speaks in online meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com